திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (14:24 IST)

விற்காத லாட்டரிக்கு 12 கோடி ரூபாய் பரிசு; கோடீஸ்வரரான தென்காசிக்காரர்

கேரளாவில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யும் ஒருவரிடம் விற்காமல் தங்கிப்போன சீட்டிற்கு 12 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசியைச் சேர்ந்த லாட்டரி வியாபாரி சுரஃபுதீனின் வாழ்க்கையே இதனால் தலைகீழாகியிருக்கிறது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு அருகே புளியறை செல்லும் வழியில் உள்ளது இரவியதர்மபுரம். இந்த ஊரைச் சேர்ந்த சுரஃபுதீன் என்பவரை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட பகுதி மக்கள் கடந்த 20 நாட்களாக வலைவீசித் தேடி வருகின்றனர். காரணம், ஒரு லாட்டரி சீட்டு மூலம் 12 கோடிக்கு அதிபதியாகியிருப்பதுதான்.

கேரளாவில் அரசு அனுமதியோடு நடைபெறும் கேரளா சம்மர் பம்பர் லாட்டரி இந்த ஆண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த ஜனவரி 17ஆம் தேதியன்று திருவனந்தபுரத்தின் மேயர் ஆர்யா ராஜேந்திரன் தலைமையில் இந்த லாட்டரிக்கான குலுக்கல் நடைபெற்றது.

இந்த குலுக்கலில் XG 358753 என்ற எண் கொண்ட டிக்கெட்டுக்கு முதல் பரிசாக 12 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப் பரிசை வென்ற நபர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் வெளியே கசிய, பெரும் திகைப்பு ஏற்பட்டது.

சுரஃபுதீன் என்பவர்தான் அந்த அதிர்ஷ்டசாலி. ஆனால், இவர் எப்படி, எங்கே அந்த டிக்கெட்டை வாங்கினார் என்ற விவரங்கள் யாருக்கும் தெரியவில்லை. தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்து வந்த சுரஃபுதீன், பிபிசி தமிழுக்காக பிரத்யேகமாகப் பேச ஒப்புக் கொண்டார்.

புளியறையை ஒட்டியுள்ள பகுதிகளில் இப்போதே பிரபலமாகிவிட்டார் சுரஃபுதீன். செங்கோட்டை தாண்டி புளியறை நோக்கி செல்லும் வழியில் உள்ள கடை ஒன்றில் இரவியதர்மபுரத்திற்கு வழி கேட்டபோது, "அந்த லாட்டரியில 12 கோடி விழுந்துச்சே அவரு வீட்டுக்கா. இப்புடியே நேரா போயி வலது பக்கம் திரும்புங்க தம்பி. இவ்வளோ நேரமா இந்த டீக்கடையிலதான் நின்னாப்டி. இப்போதான் வீட்டுக்கு போறாரு" என்றார்கள்.

சுரஃபுதீனின் வீடு எந்நேரமும் பரபரப்பாகவே இருக்கிறது. வங்கியிலிருந்து வந்திருந்த அதிகாரிகளை பேசி அனுப்பி விட்டு பிபிசியிடம் பேச ஆரம்பித்தார் சுரஃபுதீன்.

"நாங்க அண்ணன் தம்பி மூணு பேருங்க. அப்பா இல்லாத காரணத்தால பசங்க நாங்க உழைச்சுத்தான் அம்மாவை பாத்துக்க வேண்டிய சூழல் இருந்துச்சு. வீட்டோட கஷ்டத்தை புரிஞ்சுக்கிட்டு வெளிநாட்டுக்குப் போயி வேலை பாத்தேன். 9 வருஷமா அந்த பாலைவனத்துல கஷ்டப்பட்டதுக்கு ஒரு பலனுமே கிடைக்காம போயிடுச்சு. விரக்தியிலதான் ஊருக்கு கிளம்பி வந்தேன். 2013ல லாட்டரி விக்க ஆரம்பிச்சேன்.

தமிழ்நாட்டுக்குள்ள லாட்டரி சீட்டு கொண்டு வர முடியாது. அதனால, பைக்ல போயி கேரளாவுல வித்துட்டு வருவேன். அதுக்கப்பறமாதான் ஆரியங்காவுல கடை போட்டேன். என்கிட்ட சீட்டு வாங்கினவங்க நிறைய பேருக்கு பரிசு விழுந்துருக்கு. அப்போல்லாம் அவ்வளவு சந்தோஷமா இருக்கும். அதனாலேயே எனக்கு நிறைய கஸ்டமர் கிடைச்சாங்க. வியாபாரமும் நல்லா போயிட்டு இருந்துச்சு. இப்போ கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி வியாபாரம் பாத்ததுல மிச்சமான சீட்டை கடையிலயே வெச்சிட்டு வந்தேன். அதுல, விக்காத சீட்டுக்கு 12 கோடி லாட்டரி விழுந்ததா அறிவிச்சாங்க. எனக்கு தலை காலே புரியல. அழுகுறதா, சந்தோஷப்படுறதான்னுகூட தெரியாம நின்னுட்டு இருந்தேன். ஏன்னா இதுவரை யாருக்கும் இவ்வளவு பெரிய தொகை பரிசா விழுந்தது இல்ல" என்கிறார் சுரஃபுதீன்.

வீட்டில் இருந்தவர்களால் இந்த நிகழ்வை நம்பவே முடியவில்லை. ஆனால், அவர்களது தந்தை தற்போது உயிருடன் இல்லை என்ற வருத்தம் அவர்களிடம் இருக்கிறது.

"அன்னிக்கு நான் ஆட்டோ ஓட்டிட்டு வீட்டுக்கு வந்தப்போ அம்மாதான் என்கிட்ட விஷயத்த சொன்னாங்க. எனக்கு நம்பிக்கையே இல்ல. இருந்தாலும் உடனே ஆட்டோவ எடுத்துக்கிட்டு ஆரியங்கா கிளம்பி போயிட்டேன். அங்க போனா அண்ணன் அழுதுகிட்டு உக்காந்திருந்தான். எனக்கு ஏற்கெனவே லோ பிரஷர். ஆனாலும், மனச தெம்பாக்கிக்கிட்டேன். அண்ணன்கிட்டயும் எதையும் காட்டிக்கல. அதிர்ச்சியில எதுவும் ஆகிடக்கூடாதுன்னு அவன் கைய இறுக புடிச்சிக்கிட்டேன். இறைவன் நமக்கு கொடுக்கணும்னு முடிவு பண்ணிருக்கான். அவ்வளவுதான். அமைதியா இருணே. இனி நடக்குறது நடக்கட்டும்னு சொன்னேன்" என கண்ணீர் விடுகிறார் சுரஃபுதீனின் தம்பி நௌஷத்.

ஆனால், தங்கள் தாயிடம் 12 கோடி ரூபாய் பரிசு விழந்ததாகச் சொல்லவில்லை. 5 லட்சம், 15 லட்சம்னு என்று கொஞ்சம் கொஞ்சமாக முழுத் தொகையையும் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் பணத்தை வைத்து, மூத்த சகோதரரின் மகள் திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைப்பதோடு, அவர்களது பெற்றோர் வாழ்ந்த வீட்டை சரிசெய்யும் எண்ணத்திலும் இருக்கிறார்கள்.

"இந்த பரிசு விழுந்ததுல எங்க எல்லாருக்குமே அவ்வளவு சந்தோஷம். என்ன ஒண்ணு நாங்க கஷ்டப்படும்போதெல்லாம் அப்பா எங்ககூட இருந்தாரு. இப்போ இந்த நேரத்துல கூட இல்லாம போயிட்டாரேன்னு நினைக்கும்போதுதான் வருத்தமா இருக்கு" என்கிறார் நௌஷத்.

சுரஃபுதீனுக்கு லாட்டரி விழுந்த பிறகு, நண்பர்கள், உறவினர்கள் எனப் புதிது புதிதாக பலரும் சூழ ஆரம்பித்தார்கள். "ஆனா, உண்மையான சொந்தக்காரங்க யாரும் பெருசா எங்ககிட்ட எதுவும் எதிர்பார்க்கலை. அப்பாவோட சொந்தக்காரங்க எல்லோருமே அக்கம் பக்கத்துலயே இருக்காங்க. அம்மா வழியில உள்ளவங்கள்ல பலரும் கேரளாலதான் இருக்காங்க. அதனால, யாரு வர்றா, போறாங்கிறது நமக்கு நல்லாவே தெரியும். முன்ன இருந்ததவிட இப்போ கொஞ்சம் சூதானமா இருக்கணும்னு முடிவு பண்ணிருக்கோம். அதோட, வியாபாரத்துக்கு போயிட்டு வரும்போதும் ரொம்பவே ஜாக்கிரதையா இருக்க வேண்டியிருக்கு" என்கிறார் சுரஃபுதீன்.

சுரஃபுதீனும் அவரது மனைவியும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இந்தத் தம்பதிக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் வயதில் ஒரு மகன் இருக்கிறார். தனக்காக இல்லாவிட்டாலும் தன் மகனுக்காகவாவது தன் மனைவி திரும்பி தன்னிடம் வரவேண்டுமென விரும்புகிறார் சுரஃபுதீன். "அவனை நல்லா படிக்க வெச்சு ஒரு நல்ல வாழ்க்கைத்துணைய ஏற்படுத்திக் கொடுக்கணும். எனக்காக இல்லைன்னாலும் என் மகனுக்காகவாவது என் மனைவி வரணும். அவங்க வருவாங்கன்னு நான் நம்பறேன். அவங்க வந்த பிறகுதான் இந்த பரிசு கிடைச்சதுக்கான முழு சந்தோஷமும் எனக்கு கிடைக்கும்" என்கிறார்.

12 கோடி ரூபாய் பரிசுப் பணத்தில் வரி பிடிக்கப்பட்டதுபோக, கிட்டத்தட்ட 7.5 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக சுரஃபுதீனுக்குக் கிடைக்கும்.

"ஒரே நாள்ல எல்லாமே மாறின மாதிரி இருக்கு. லாட்டரி விழந்ததும் நான் கேரளாவுக்கு ஓடிப்போயிட்டதா பேச்சு அடிபட்டுச்சு. அதெல்லாம் இல்லீங்க. நானும் சரி, என் வீட்டுல உள்ளவங்களும் சரி முன்ன இருந்த மாதிரிதான் இருக்கோம். இதோ இப்போக்கூட நான் கடைக்கு போயி வியாபாரம் பாத்துட்டுதான் வர்றேன். இதே ஊர்லதான் இருக்கிறேன். முன்ன இருந்ததைவிட இப்போ கூடுதலா உழைக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன். அதுக்காகதான் ஓட ஆரம்பிச்சிருக்கேன்" என்கிறார் சுரஃபுதீன்.