திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 ஜூன் 2021 (23:46 IST)

இலங்கையில் கொரோனாவால் ஒரே நாளில் 100 பேர் மரணம்

இலங்கையில் கோவிட் - 19 தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக சடுதியாக அதிகரித்து வருகிறது.
 
இலங்கையில் முதல் முறையாக நாளொன்றில் 100ற்கும் அதிகமான கோவிட் உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று தகவல் வெளியிட்டது.
 
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்கவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கை ஒரே நாளில் 101 உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாகக் கூறுகிறது.
 
இறுதியாக 53 ஆண்களும், 48 பெண்களும் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
 
நாட்டிலுள்ள பெரும்பாலான மாகாணங்களில் இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான கோவிட் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 2011ஆக அதிகரித்துள்ளது.
 
இலங்கையில் கோவிட் பரவல் ஆரம்பமான 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இதுவரையான காலம் வரை ஐந்து விதமான கோவிட் கொத்தணிகள் ஏற்பட்டுள்ளதாக கோவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
 
 
பொதுவான கோவிட் கொத்தணி, மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை கோவிட் கொத்தணி, பேலியகொடை மீன் சந்தை கோவிட் கொத்தணி, வெளிநாட்டு கோவிட் கொத்தணி மற்றும் தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டு கோவிட் கொத்தணி என்ற ஐந்து விதமான கோவிட் கொத்தணிகள் பதிவாகியுள்ளன.
 
நாட்டில் தற்போது மூன்றாவது கோவிட் அலை பரவி வரும் நிலையில், நாளொன்றுக்கு சுமார் 2500ற்கும் அதிகமான தொற்றுகள் பதிவாகி வருகின்றன.
 
இலங்கையில் மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 395 கோவிட் தொற்றுகள் இதுவரை பதிவாகியுள்ள நிலையில், கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் பரவ ஆரம்பித்த தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டு கோவிட் கொத்தணி காரணமாக மாத்திரம் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
 
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரிட்டனில் பரவத் தொடங்கிய கோவிட் அல்பா திரிபே பரவி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல்துறை பீடத்தின் பிரதானி, டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
 
தமது பீடத்தினால் நாடு முழுவதும் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 96 மாதிரிகளின் ஊடாக நடத்தப்பட்ட ஆய்வுகளிலேயே இது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
அத்துடன், இந்தியாவில் பரவி வரும் டெல்டா கோவிட் திரிபினால் தொற்றுக்குள்ளான இருவர் மாத்திரமே நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்குள் வைக்கப்பட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
 
இவ்வாறான நிலையில், நாடு முழுவதும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடையை, திட்டமிட்ட வகையில் வரும் 14ம் தேதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்த எதிர்பார்த்துள்ளதாக கோவிட் -19 தடுப்புக்கான செயலணியின் பிரதானி, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்று ( ஜூன் 10) தெரிவித்திருந்தார்.