வைகோ வெளியேறுகிறார்? - உடைகிறதா மக்கள் நலக் கூட்டணி?
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறுகிறார் எனவும், மக்கள் நலக் கூட்டணி உடைகிறது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டியக்கம் என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்தன. அதன் ஒருங்கிணைப்பாளராக வைகோ இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் இந்த கட்சியில் தேமுதிக மற்றும் தாமக ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன.
தேர்தலின் முடிவில் இந்த கூட்டணி பலத்த தோல்வியை கண்டது. அதன்பின் தேமுதிக மற்றும் தாமக ஆகிய கட்சிகள் கூட்டனியிலிருந்து வெளியேறியது.
இந்நிலையில் வருகின்ற 28ஆம் தேதி, புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் அரசியல் அமைப்பு மாநாடு நடத்தப்படுகிறது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள இரு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், மதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதுபற்றி கருத்து தெரிவித்த திருமாவளவன் ‘மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பை வைகோ ஆதரிக்கிறார். எனவே அவர் அழைக்கப்படவில்லை’ என கூறியுள்ளார்.
எனவே மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறி விடுவார் எனவும், விரைவில் அந்த கூட்டணி உடைந்து விடும் எனவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.