வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (12:53 IST)

இது ஊமைகளின் தேசமா? குருடர்கள் தான் நம் எஜமானர்களா?

ஆழி சூழ் உலகைப்போல தமிழகத்தைத் துன்பங்களும், துயரங்களும் சூழ்ந்து உள்ளது. கலைஞரின் மௌனமும், ஜெயலலிதாவின் துயிலும், நம்மை கொஞ்சம் வர்தா புயலைப் போல உலுக்கிக்கொண்டு இருக்கிறது. இது காலத்தின் கோலமா? கடவுள் செய்த மாயமா? 


 

 
அம்மன் படத்தில் வரும் கோடி ராம கிருஷ்ணா வசனம் "அம்மன் ! குருட்டு அம்மன்! குருட்டு அம்மன்! குருடி அம்மன்", என்பதைப் போல தமிழக எஜமானர்கள் அனைவரும் குருடர்களாக மாறி விட்டார்களோ   என எண்ண தோன்றுகிறது. 
 
அமைச்சர்கள் எல்லாம் காந்தாரியைப் போல கண்களைக்கட்டி கொண்டார்கள்.  காந்தாரி தன் கணவனுக்காக கண்களைக் கட்டி கொண்டார்,  ஆனால் இவர்கள் தாங்கள் அடித்த கொள்ளைக்காக மக்களை பற்றி தெரியாமல்/புரியாமல் கண்களைக் கட்டி கொண்டார்கள். காந்தாரி ஒரு உண்மையான சிவபக்தை ஆனால் இவர்களோ மோடியின் பக்தை போல பாசாங்கு செய்து, சில காலம் வருமான வரி சோதனையில் இருந்து  தப்பிக்கப் பார்க்கிறார்கள்.
 
நாட்கள் பல கடந்தும், நெடுவாசல், கதிராமங்கலம் என காவிரி டெல்டா மாவட்டங்கள் அனைத்திலும் தொடரும் போராட்டங்கள்! போராட்டக் களத்தில் பேராசிரியர் ஜெயராமன் கைது செய்யப்படுகிறார். அந்த பகுதி மக்கள் மட்டும் போராடுகிறார்கள். நாம் ஓவியாவையும், பிந்து மாதவியையும் ரசித்துக்  கொண்டு இருக்கிறோம். மீத்தேன் அழிவுகளைப் பற்றி நாசம்! சர்வ நாசம்  பற்றி பேசினால் சகோதரி வளர்மதி  நக்சல் என்று முத்திரை குத்தப்படுகிறார்.  
 
ஆம்! மக்கள்தான் ஊமை ஆகி போனார்கள் ! நம் பிக் பாஸ் எடபாடியார் குருடர் அல்ல!
 
டிஜிட்டல் இந்தியா! தூய்மை இந்தியா! பற்றி பேசுவோம் ஆனால் ஒரு சகோதரி திவ்யபாரதி மலத்தை கைகளால் அள்ளும் ஒரு சமூகத்தைப்  பற்றிப்பேசும் போது/படம் இயங்கும் போது அவரை  வன் சொற்கள் கொண்டு அர்ச்சிப்போம். 
 
வழக்குகள் பாயும். அரசு கடத்தல் வழக்குகள் பதியும். ஆம் ஆம் மக்கள் தான் ஊமை ஆகி போனார்கள்.
 
நீட் தேர்வால் கானல் நீராகிப்போன மருத்துவக்கல்வி! சட்டச்சிக்கலை காரணம் காட்டும் மந்திரிகள். ஆம்! மக்கள்தான் ஊமை ஆகி போனார்கள்!  நம் மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் விஜய பாஸ்கர் குருடர் அல்ல!
 
உங்கள் வீட்டில் சமைத்து சாப்பிடுவதற்கு நாங்கள் வரி போடவில்லையே என்று பேசும் தடித்த  நாக்குகள் பேசும் போதும், காஸ் மானியம் ரத்து என்ற அறிவிப்பு வரும் போதும், ஆம் மக்கள் தான் ஊமை  ஆகி போனார்கள் ! இங்கு சீதாராமன்கள் குருடர்கள்  அல்ல!
 
விமர்சனங்ககளை விமர்சனங்களால் எதிர்கொள்ளாமல் “டாய் வந்து பார்! என்று பேட்டை ரவுடிகளைப் போல பேசும் வினோத அமைச்சர்கள். ஆம் மக்கள் தான் ஊமை  ஆகி போனார்கள்! இங்கு அமைச்சர் ஜெயகுமாரும் அமைச்சர் செல்லூர் ராஜுவும்  குருடர்கள் அல்ல!
 
டாஸ்மாக் எதிராக போராடும் மக்களை இரும்புக் கரம் கொண்டு அடங்கும் இந்த அரசு ! ரேஷன் பொருட்கள் விஷயத்தில் கண்களை மூடி  கொள்ளும் குருட்டு அரசு. ஆம் மக்கள் தான் ஊமை  ஆகி போனார்கள்.  நம்  மாண்பு  மிகு அமைச்சர் காமராஜ் குருடர் அல்ல!

இரா காஜா பந்தா நவாஸ் 
பேராசிரியர்