Last Updated : செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (19:47 IST)
அதிமுகவின் இரு அணிகளும் இணைகிறதா? -நடப்பது என்ன?
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியும், மற்றவர்களும் ஒன்றாக இணைவது போன்ற ஒரு தோற்றம் உருவாகியுள்ளது.
ஜெ.வின் மரணத்திற்கு பின், தனது முதல்வர் பதவி பறிக்கப்பட்டதும் பொங்கி எழுந்த ஓ.பி.எஸ், சசிகலா அணிக்கு எதிராக களம் இறங்கினார். அவர் பக்கம் 11 எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள், அப்போது அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், பி.ஹெச் பாண்டியன் உள்ளிட்ட சிலர் சென்றனர்.
இதனால் அதிமுக இரு அணிகளாக பிரிந்தது போல ஒரு தோற்றம் ஏற்பட்டது. ஆனால், இந்த பிளவு மக்கள் மத்தியில் பதியக்கூடாது என்பதில் தெளிவாக இருந்த தினகரன் மற்றும் தம்பிதுரை போன்றவர்கள், அதிமுகவில் எந்த பிளவும் இல்லை, நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம் என ஊடகங்களில் தொடர்ந்து கூறி வந்தனர்.
யார் முதல்வர் என்கிற பிரச்சனையில் அதிமுக எம்.எல்.ஏக்களை கூவத்தூர் விடுதியில் சிறை வைத்தது சசிகலா தரப்பு. இதனால், ஆளுநரிடம் தனது பெரும்பான்மையை ஓ.பி.எஸ்-ஸால் நிரூபிக்க முடியவில்லை. எனவே, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கி, அவர் சார்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது. அதில் 11 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டும் ஓ.பி.எஸ்-ற்கு கிடைத்தது. எனவே, எடப்பாடி முதல்வராக அறிவிக்கப்பட்டார்.
அதன் பின், இரட்டை இலை மற்றும் கட்சி பெயர் முடக்கம், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என சூடுபிடித்தது தமிழக அரசியல். எனவே, தினகரன் மற்றும் சசிகலாவின் தலைமையின் கீழ் அதிமுக செயல்பட்டால் அது, அதிமுகவின் எதிர்காலத்தையே பாதிக்கும் என சில முக்கிய அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கருதுவதாகவும், அவர்கள், தினகரனை பதவி விலக வேண்டும் எனவும் வற்புறுத்தி வருவதாகவும் செய்திகள் வெளிவந்தன.
மேலும், தினகரனுக்கு எதிராக திரும்பியிருக்கும் அமைச்சர்களோடு, ஓ.பி.எஸ் அணியும் சுமூக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஒன்றாக இணைந்து அதிமுகவை கைப்பற்றும் முயற்சில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இதற்காக தம்பித்துரை, வைத்திலிங்கம், தங்கமணி, வேலுமணி, சண்முகம் ஆகியவர்களை கொண்ட ஐவர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர்கள் மூலம் ரகசிய பேச்சு வார்த்தையில் இரு தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர் என செய்தி வெளியானது.
மேலும், அப்படி நடக்கும் போது யாருக்கு என்ன பதவி, ஆட்சியை கவிழ்க்க தினகரன் திட்டமிட்டால் எப்படி சமாளிப்பது என்பது பற்றியெல்லாம அவர்கள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்பட்டது. முக்கியமாக, கட்சியை காப்பாற்ற ஏப்ரல் 18ம் தேதிக்குள் (இன்று) பதவி விலக வேண்டும் என அந்த ஐவர் குழு கெடு விதித்திருப்பதாகவும், அப்படி தினகரன் பதவி விலக மறுத்தால், தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மீடியாக்களில் பேசும் தினகரன், அப்படி எதுவும் இல்லை. எனக்கெதிராக எந்த அமைச்சர்களும் செயல்படவில்லை என தொடர்ந்து கூறிவருகிறார்.
இந்நிலையில்தான் அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை மீட்க இடைத்தரகர் மூலம் தினகரன் ரூ.60 கோடி பேரம் பேசியதாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக சுகேஷ் சந்தர் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில், டெல்லி போலீசார் சென்னை வந்து தினகரனிடம் விசாரணை செய்வார்கள் எனத் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், இரு அணிகளும் ஒன்றாக சேருவதை விரும்புவதாகவும், இது குறித்து அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் செல்வோம் எனக் கூறினார். அதை வரவேற்பதாக தம்பிதுரை, திண்டுக்கல் சீனிவாசன் போன்றவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, இரு அணிகளும் ஒன்றாக இணைவது போல ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், சசிகலா, தினகரனை தவிர்த்து மற்றவர்கள் ஒன்றாக இனையலாம். அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் அதிமுகவில் இருக்கக்கூடாது. அதற்கு சரி என்றால் பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் என ஓ.பி.எஸ் தற்போது கூறியிருக்கிறார். எனவே, சசிகலா குடும்பத்தினரை அதிமுகவிலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டு மற்றவர்கள் இணைந்து அதிமுகவை வழிநடத்துவோம் என்பதுதான் ஓ.பி.எஸ் அணியின் முடிவாய் இருக்கிறது.
ஆனால், இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தம்பிதுரை, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் போன்ற முக்கிய நபர்கள் சம்மதம் தெரிவிப்பார்களா என்பதுதான் இப்போதைய கேள்வி?
இந்நிலையில்தான், நேற்று எடப்பாடி பழனிச்சாமியை தம்பிதுரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும், அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் இன்று சென்னை வரவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், நேற்று இரவு அமைச்சர் தங்கமணி வீட்டில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் ஒன்று கூடி ஓ.பி.எஸ்-ஸின் முடிவு பற்றி விவாதித்தனர். அதன்பின் அவரின் கருத்தை வரவேற்பதாக கூறினர்.
ஆனால் இந்த விவகாரம் பற்றி தினகரன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக செங்கோட்டையன், தளவாய் சுந்தரம், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் அவர் இன்று காலை ஆலோசனை நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ஓ.பி.எஸ் கூறிய கருத்து பற்றி விவாதித்தாகவும், இரட்டை இலை சின்னத்தை மீட்பதுதான் எங்கள் நோக்கம் எனக் கூறியுள்ளார்.
பரபரப்பான சூழ்நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழக அரசியல்.....