2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ; நவம்பர் 7ம் தேதி தீர்ப்பு - என்னவாகும் திமுகவின் எதிர்காலம்?
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் மீதான் தீர்ப்பு நவம்பர் 7ம் தேதி அறிவிக்கப்படுவதால், திமுகவின் அரசியல் எதிர்காலத்தில் சில மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற நவம்பர் 7ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் ரூ.1,76,000 கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது என கணக்கு தனிக்கை குழு குற்றம்சாட்டியது. இதில் முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கியதற்கு லஞ்சமாக, ஸ்வான் டெலிகாம் நிறுவனம் மூலம் டி.பி., குழுமம், ரூ.200 கோடியை கலைஞர் தொலைக்காட்சிக்கு அளித்ததாகவும் சிபிஐ குற்றம் சாட்டியது. இதில் ஆ.ராசா, கனிமொழி மற்றும் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான், அக்.25ம் தேதி (இன்று) தீர்ப்பு வெளியாகும் என நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், நவம்பர் 7ம் தேதிக்கு தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிபதி இன்று காலை அறிவித்தார்.
இந்த தீர்ப்பை பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர். ஏனெனில், இதில், திமுகவின் அரசியல் எதிர்காலம் அடங்கியிருக்கிறது. ஏற்கனவே, முதுமை மற்றும் உடல்நிலை காரணமாக திமுக தலைவர் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். மேலும், கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் எதிர்பார்த்தபடி திமுக வெற்றிபெறவில்லை. இந்நிலையில் தீர்ப்பில் ராசா, கனிமொழி மற்றும் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வெளியானால் அது திமுகவிற்கு பாதகமாகவே முடியும்.
இதையே காரணமாக கூறி அதிமுக அடுத்தடுத்த தேர்தல்களில் பிரச்சாரம் செய்யும். ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு அரசியல் காட்சிகள் அரங்கேறி வரும் வேளையில், 2ஜி வழக்கின் தீர்ப்பால், பல அரசியல் திருப்பங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, திமுகவினர் கலக்கம் அடைந்துள்ளனர்.