ரஷ்யாவில் வேலையில்லா வாரம் துவங்கியது!
ரஷ்யா உச்சத்தில் இருக்கும் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக வேலையில்லா வாரம் என்ற புதிய திட்டம் துவங்கியுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா பரவி வரும் நிலையில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பல நாடுகளும் கொரொனா தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்து வருகிறது தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தற்போது சீனாவிலும் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ரஷ்யாவிலும் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு மரணங்களும் அதிகரித்துள்ளதால் ஒரே வாகனத்தில் 2 அல்லது 3 சடங்களை ஏற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இடம் இல்லாமல் பல்வேறு நகரங்களில் இடுகாடு பிரச்சனை ஏற்பட்டு புதிய இடுகாடுகள் அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டது.
இதனால் ரஷ்யாவில் ஒரு வாரம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் புடீன் அறிவித்தார். அதன்படி ரஷ்யா உச்சத்தில் இருக்கும் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக வேலையில்லா வாரம் என்ற புதிய திட்டத்தை ரஷ்யா தொடங்கியுள்ளது. நவம்பர் 7 ஆம் தேதி வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.