புதன், 11 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 21 செப்டம்பர் 2024 (12:56 IST)

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

Srilanka Election
இலங்கை அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மாலை வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 
 
தவறான பொருளாதார கொள்கைகளால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிதி நெருக்கடியில் சிக்கியது இலங்கை.  இதனால் வெடித்த வன்முறைக்கு பயந்து அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபட்சே நாட்டைவிட்டு தப்பி சென்றார். இதையடுத்து ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபரானார். அவரது ஆட்சி காலம் வருகிற நவம்பர் மாதம் நிறைவடைகிறது. 
 
இந்நிலையில் இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்யும் தேர்தல்  இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிடுகிறார். சமகி ஜன பலவாகயா கட்சி சார்பில் சஜித் பிரேமதாச போட்டியிடுகிறார். மேலும் ஜனதா விமுக்தி பெரமுனா என்ற கட்சி வேட்பாளர் அனுர குமார திஸநாயக மற்றும் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே உள்பட 38 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
 
People Votes
காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். கொழும்புவில் உள்ள வாக்குச்சாவடியில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே குடும்பத்தினருடன் வந்து வாக்களித்து சென்றார். இந்த தேர்தலில் 50 சதவீதத்திற்கு மேல் வாக்கு பெறுபவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. 
 
இலங்கை மக்கள் தொகை 1.7 கோடியாக உள்ள நிலையில், இதில் 40 லட்சம் பேர் தமிழர்கள் ஆவார்கள். இதனால் தமிழர்களின் வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் முடிவடைந்த பிறகு சிறிது நேரம் இடைவேளை விடப்படுகிறது. அதன்பிறகு இன்று இரவு 9 மணிக்கு ஓட்டு எண்ணும் பணி தொடங்கி நடைபெற உள்ளது. இலங்கையை பொறுத்தவரை வாக்குச்சீட்டு முறை தான் நடைமுறையில் உள்ளது.

 
இதனால் இன்று இரவு தொடங்கும் ஓட்டு எண்ணிக்கை என்பது நாளை வரை நடக்கும். நாளை காலைக்குள் இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார் என்பது தெரிந்துவிடும். அதிபர் தேர்தலை முன்னிட்டு இலங்கை முழுவதும் பலத்த போலீஸ் மற்றும் துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.