ஒரே வீடியோ காலில் 900 பேரை வீட்டுக்கு அனுப்பிய நிறுவனர்! – அமெரிக்காவில் பரபரப்பு!
அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்தின் நிறுவனர் ஒருவர் தனது ஊழியர்கள் 900 பேரை ஒரே ஒரு வீடியோ கால் மூலமாக பணியிலிருந்து நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பெட்டர்.காம் என்ற நிறுவனத்தை விஷால் கார்க் என்பவர் நடத்தி வருகிறார். ரியல் எஸ்டேட், இன்சூரன்ஸ் உள்ளிட்ட சேவைகளை மேற்கொண்டு வரும் இந்த நிறுவனத்தில் 5 ஆயிரம் பேருக்கு மேல் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் இந்த நிறுவனத்தை சேர்ந்த 900 பேருக்கு வீடியோ கால் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய அந்நிறுவனத்தின் செயல் அதிகாரி இந்த வீடியோ அழைப்பை பார்த்துக் கொண்டிருக்கும் 900 பேரும் பணியை விட்டு நீக்கப்படுகிறீர்கள் என அறிவித்துள்ளார். ஒரே காலில் 900 பேரை வேலையை விட்டு நீக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அந்நிறுவனம் நீக்கப்பட்ட நபர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே பணி புரிந்ததாகவும், மேலும் சக ஊழியர்கள், கஸ்டமர்களிடம் பண ஊழல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறியுள்ளது.