வேலைய காட்டிட்டாங்க.. தென்கொரியாவில் விழுந்த ஏவுகணை! – வடகொரியாவுக்கு பதிலடி!
வடகொரியா சோதித்த ஏவுகணைகளில் மூன்று தென்கொரிய எல்லையில் விழுந்த நிலையில் தென்கொரியா பதிலுக்கு ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக வடகொரியா மேற்கொண்டு வரும் ஏவுகணை சோதனைகள் அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தி வருவதோடு, உலக நாடுகளின் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.
இதனால் வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தும் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை வடகொரியா மேற்கொண்டு வருகிறது. சமீபமாக தென்கொரியா – அமெரிக்கா இணைந்து மேற்கொள்ளும் கூட்டு போர் பயிற்சியை வடகொரியா கண்டித்து வருகிறது.
இந்நிலையில் தென் கொரியாவை அச்சுறுத்தும் விதமாக நேற்று ஒரே நாளில் 23 ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது வடகொரியா. அதில் மூன்று ஏவுகணைகள் தென்கொரிய எல்லையில் உள்ள கடல் பகுதியில் விழுந்துள்ளன. இதனால் தென்கொரிய தீவான உல்லியுங் தீவில் எச்சரிக்கை சைரன் ஒலிக்கப்பட்டதால் மக்கள் சுரங்க பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
வடகொரியாவின் இந்த செயலுக்கு பதிலடியாக தென்கொரியாவும் மூன்று ஏவுகணைகளை வடகொரிய எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் வீசியுள்ளது. இரு நாடுகளும் ஏவுகணைகளை வீசிக் கொண்ட சம்பவம் கொரிய தீபகற்ப பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited By Prasanth.K