1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 அக்டோபர் 2022 (09:42 IST)

உக்ரைனில் போரை நிறுத்த இதான் வழி..? – எலான் மஸ்க் ட்வீட்டால் சர்ச்சை!

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வரும் நிலையில் போர் நிறுத்தம் குறித்து எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி 8 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையிம் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து நடந்து வரும் போரால் இரு தரப்பு ராணுவ வீரர்களும் உயிரிழந்து வருவதுடன், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைன் நாட்டின் லுஹான்ஸ்க், டோனர்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா உள்ளிட்ட பிராந்தியங்களை கைப்பற்றியுள்ள ரஷ்யா அவற்றை தனது நாட்டுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.


இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட எலான் மஸ்க், ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் உள்ள மக்களிடம், அவர்கள் உக்ரைனுடன் இணைய விரும்புகிறார்களா? அல்லது ரஷ்யாவுடன் இணைய விரும்புகிறார்களா? என பொது வாக்கெடுப்பு நடத்தலாம் என்ற யோசனையை முன்வைத்தார்.

இதற்கு உக்ரைனிடமிருந்தே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எலான் மஸ்க் ட்வீட்டை தொடர்ந்து ட்வீட் போட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி “உங்களுக்கு எந்த எலான் மஸ்க்கை பிடிக்கும்? ரஷ்ய ஆதரவு எலான் மஸ்க்கா? அல்லது உக்ரைன் ஆதரவு எலான் மஸ்க்கா?” என கேட்டுள்ளார்.

தன் மீதான விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க் “உக்ரைனால் போரில் வெல்ல முடியாது. ரஷ்யாவின் படைபலம் 3 மடங்கு பெரியது. இந்த போரால் உலக நாடுகளும் பெரிதும் பாதிக்கப்படும். போரை விட பேச்சுவார்த்தை, பொது வாக்கெடுப்பில் தீர்வு காணும் சுமூக முறை சிறப்பானதாக இருக்கும்” என கூறியுள்ளார்.

Edited By: Prasanth.K