1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 ஜூன் 2020 (10:34 IST)

எல்லாருக்கும் ஒரே சட்டம்தான்! - மாஸ்க் போடாத பிரதமருக்கு அபராதம்!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மாஸ்க் அணியாமல் சென்ற பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், பலர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. முகக்கவசம் அணிதல், சானிட்டைசர் உபயோகித்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற பல்வேறு நடைமுறைகளை மக்கள் பின்பற்றுவதை பல நாடுகள் கண்டிப்பான சட்டமாக பின்பற்ற தொடங்கியுள்ளன.

பல்கேரியாவில் வெளியே வந்தாலே முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் பிரதமரான பொய்கோ போரிசோவ் அங்குள்ள தேவலயம் ஒன்றில் கலந்து கொண்டார். அதற்கு அவர் மாஸ்க் அணியாமல் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மட்டுமல்லாமல் அவருடன் சென்ற பிற அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களும் முக்கவசம் அணியாமல் சென்றுள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பல்கேரிய சுகாதார துறை அமைச்சர் முகக்கவசம் அணியாமல் சென்ற பிரதமர் மற்றும் அதிகாரிகளுக்கு தலா 300 லிவ்ஸ் (இந்திய மதிப்பில் 13 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதித்துள்ளார். பிரதமருக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.