பீரை விடுங்க.. அந்த பீர் கேனை பாருங்க! – காலி பீர் கேன்களை விற்று லட்சாதிபதியான நபர்!
இங்கிலாந்தை சேர்ந்த 60 வயது நபர் தான் சேர்த்து வைத்த பீர் கேன்களை பல லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ள சம்பவம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதுமே பீர் பானத்தை விரும்புபவர்கள் பலர் உள்ளனர். பீர் அதிகம் குடித்தால் தொப்பை விழும் என நமது ஊர்ப்பக்கங்களிலும் ஒரு பேச்சு உள்ளது. பெரியவர்கள் குடித்துவிட்டு போட்ட பீர் பாட்டில்களை வீட்டு சிறுவர்கள் ஐஸ் வண்டிக்காரரிடம் கொடுத்து ஐஸ் வாங்கி சாப்பிடுவதெல்லாம் 90ஸ் காலத்து நினைவுகள். இங்கிலாந்தில் அப்படியாக சிறுவயதிலிருந்தே பீர் கேன்களை சேர்த்தவர் தற்போது லட்சாதிபதியாகியுள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த 60 வயதான நிக் வெஸ்ட் என்ற தாத்தாவுக்கு அவரது இளம் காலத்திலிருந்தே பீர் கேன்கள் மீது ஒரு பிரியம். பலரும் பல பொருட்களை சேகரிக்க ஆர்வம் காட்டுவது போல நிக் தனது 20வது வயதிலிருந்தே பீர் கேன்களை சேகரிப்பதை பொழுதுபோக்காக கொண்டுள்ளார். பல்வேறு நிறுவனங்களின் பீர் கேன்களை சேர்த்து வைத்திருந்த அவர் கடந்த 42 ஆண்டுகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பீர் கேன்களை சேகரித்து வைத்திருந்துள்ளார். இதில் பல பீர் கம்பெனிகள் இப்போது செயல்பாட்டிலேயே இல்லையாம்.
ஆனால் ஏகப்பட்ட பீர் கேன்களை சேர்த்து வைத்திருந்த நிக் தாத்தாவிற்கு அதற்கு மேல் பீர் கேன்களை சேகரிக்க வீட்டில் இடமே இல்லாததால் அவற்றை வரும் விலைக்கு விற்றுவிடலாம் என முடிவு செய்துள்ளார். நிக் பீர் கேன்கள் விற்பனைக்கு என அறிவிக்கவும், பலரும் ஆர்வமுடன் பழங்கால பீர் கேன்களை போட்டிப் போட்டு வாங்கியுள்ளனர். நிக் தனக்கு பிடித்தமான 3 பீர் கேன்களை தவிர மற்ற அனைத்தையும் விற்று ரூ.26 லட்சம் லாபம் பார்த்துள்ளார்.
Edit by Prasanth.K