1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By

வாஸ்து சாஸ்திரத்திற்கும் வாஸ்து புருஷனுக்கும் உள்ள தொடர்பு என்ன...?

வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதுடன்,  கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப்பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும்.
கட்டிடம் கட்டுவதற்கான மனையில் (நிலம்), கட்டிடத்தின் அமைவிடம், நோக்கும் திசை, மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்க வேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வாஸ்து புருஷ மண்டலம் ஆகும்.
 
வாஸ்து புருஷ மண்டலம் என்பது ஒரு சதுர வடிவத்தை 64 அல்லது 81 கட்டங்களாகப் பிரித்த ஒரு வரி வடிவமாகும். இவற்றில் குறிப்பிட்ட  சில கட்டங்களுக்கு பல்வேறு தேவர்கள் அதிபதிகளாக இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
 
இம் மண்டலத்தின் மையப் பகுதிக்கு வேதகால முழுமுதற் கடவுளான பிரம்ம தேவன் அதிபதியாக உள்ளார். 81 கட்டங்களைக் கொண்ட  வாஸ்து புருஷ மண்டலத்தில் மையப்பகுதியிலுள்ள ஒன்பது கட்டங்களும் இவருக்கு உரியவை.
இதனால் இப்பகுதி பிரமஸ்தானம் எனப்படுகிறது. இம்மண்டலத்தில் மொத்தமாக 45 தேவர்கள் இருப்பதாக வாஸ்து நூல்கள் கூறுகின்றன.  முக்கியமான எட்டுத் திசைகளுக்கும் அதிபதியான தேவர்கள் அட்டதிக்குப் பாலர்கள் எனப்படுகின்றார்கள்.
 
வடக்குத் திசைக்குப் குபேரனும், கிழக்குத் திசைக்கு ஆதித்தனும், தெற்குத் திசைக்கு இயமனும், மேற்குத் திசைக்கு வருணனும்  அதிபதிகளெனக் குறிப்பிடப்படுகிறார்கள். வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளுக்கு முறையே வாயு, ஈசன்,  அக்னி, பித்ரு ஆகியோர் அதிபதிகள்.
 
இந்து தத்துவங்களின்படி நிலம் உயிர்ப்புள்ள ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஒவ்வொரு கட்டிட மனையிலும் உள்ள இந்த உயிர்ப்புச் சக்தியையே வாஸ்து புருஷன் என வாஸ்து சாஸ்திரம் உருவகப்படுத்துகின்றது.
 
இந்த உருவகம் குறியீட்டு வடிவில் தரப்படும் போது, வடகிழக்கில் தலையும், தென்மேற்கில் காலும் இருக்க வாஸ்து புருஷ மண்டலத்தைக்  குப்புறப்படுத்தபடி ஆக்கிரமித்திருக்கும் ஒரு ஆண் உருவமாக வாஸ்து புருஷன் விபரிக்கப்படுகின்றான்.