ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By

வாஸ்து புருஷன் விழித்திருக்கும் காலம் பூமி பூஜைக்கு ஏற்றதா...?

நாம் வாழப்போகும் வீட்டை உயிரற்ற ஜடப் பொருளாகக் கருதாமல், உயிர்ச் சக்தியாகப் பாவித்து 'வாஸ்து புருஷன்' எனும் குறியீடாக எழுதப்பட்டதே வாஸ்து சாஸ்திரம். வாஸ்து நூலில் 'வாஸ்து புருஷன்' பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. 
வாஸ்து புருஷன் என்கிறவர் ஆதிகாலத்தில் பிரபஞ்சம் உருவானபோது தோன்றிய பெரும் பூதம். பிரம்மன் உலகத்தைப் படைத்தபோது நிலத்தையும், ஆகாயத்தையும் ஒருசேர வியாபித்துக்கொண்டு வடகிழக்கில் தலையையும், தென்மேற்கில் காலையும் வைத்துக்கொண்டு  குப்புறக் கிடந்தபடி தோன்றினார்.  
 
ஐம்பூதங்களையும் தன்னகத்தே கொண்டு பெரும்பூதமென உறங்கிக்கொண்டிருந்த வாஸ்து பகவானைக் கண்டு நடுநடுங்கிப் போன பிரம்மனும்,  தேவர்களும் அவரை எழுந்திருக்க விடாதபடி, அப்படியே குப்புறக் கிடந்த நிலையிலேயே அழுத்திக்கொண்டார்கள். வாஸ்து பகவான் அப்படியே  உறங்கத் தொடங்கிவிடுவார். அப்போது யார், யார் எந்தெந்தப் பகுதியைப் பிடித்து அழுத்திக்கொண்டார்களோ, அவரவர் அந்தந்தப் பகுதிகளுக்கு  அதிபதியானார்கள். பிரம்மனாலும், தேவர்களாலும் உறங்கவைக்கப்பட்ட வாஸ்து புருஷன் வருடத்தில் 8 நாள்கள்தாம் கண் விழிப்பார். அந்த  நாள்களிலும் 3 3/4 நாழிகைதான் (1 1/2 மணி நேரம்) விழித்திருப்பார், பிறகு மீண்டும் உறக்க நிலைக்குச் சென்றுவிடுவார்.
 
அவர் விழித்திருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் கடைசி 36 நிமிடங்கள் மட்டுமே பூமி பூஜை செய்வதற்கு ஏற்ற நேரம். வாஸ்து புருஷன் கண் விழித்து உணவு உண்டு, தாம்பூலம் தரிக்கும் நேரம் இது. இந்த நேரத்தில் மனை பூஜையைத் தொடங்கி முடித்தால் மனை சிறப்பாக அமையும்.  மற்ற நேரத்தில் பூஜை செய்யக்கூடாது.
 
பூமி பூஜை:
 
மனையின் வடகிழக்கு மூலையில்தான் பூமி பூஜை செய்ய வேண்டும். வடகிழக்கு மூலையில் மூன்றுக்கு மூன்றடி பள்ளம் தோண்டி, அங்கிருக்கும் மண்ணை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக மண் கொண்டுவந்து நிரப்ப வேண்டும். பிறகு, அதில் ஓர் அடி ஆழமுள்ள குழி  எடுத்துக்கொள்ள வேண்டும். 
 
ஆறு, கடல், ஓடை, ஏரி ஆகியவற்றிலிருந்து நீர் கொண்டுவந்து அதில் பால் சேர்த்து குடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், முறைப்படி விநாயகர், குலதெய்வம் மற்றும் விருப்பமான தெய்வத்தை மனதார வேண்டியபடி, மூன்று அல்லது ஐந்து என்ற எண்ணிக்கையில் செங்கற்கள் எடுத்து அவற்றுக்குச் சந்தன குங்குமத் திலகம் இட்டு, குழியில் ஊன்ற வேண்டும். இதைத் தொடர்ந்து கன்னிப்பெண்கள்,  குடும்பத்தில் இருக்கும் மூத்த பெண்களை பால் கலந்த நீரை குழிக்குள் ஊற்றச்செய்ய வேண்டும். பிறகு ஒன்பது நவதானியங்களையும்  தூய்மையான வெள்ளைத் துணியில் முடிச்சிட்டு பாலக்கோலில் கட்டி, குழிக்குள் இறக்க வேண்டும். இதுவே பூமி பூஜை செய்யும் முறை.  இந்தப் பூமி பூஜையை வாஸ்து நேரத்தில் கடைசி 36 நிமிடத்துக்குள் செய்து முடித்துவிட வேண்டும்.