புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : வெள்ளி, 25 மே 2018 (20:29 IST)

ஒரு குப்பைக்கதை: திரைவிமர்சனம்

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடிப்பில் அறிமுக இயக்குனர் காளி ரெங்கசாமியின் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'ஒரு குப்பைக் கதை' படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
 
சென்னை கூவம் கரையில் உள்ள ஒரு குப்பத்தில் வாழும் தினேஷ் குப்பை அள்ளும் வேலை பார்ப்பவர்.  தினேஷின் அம்மா அவருக்கு ஏழு வருடங்களாக பெண் பார்த்தும் எந்த பெண்ணும் அமையவில்லை. இந்த நிலையில் புரோக்கர் ஒருவரின் மூலம் வால்பாறையில் மனிஷா யாதவ்வை பெண் பார்க்கின்றனர். ஆனால் தான் குப்பை அள்ளுபவர் என்பதை தினேஷ் தனது வருங்கால மாமனாரிடம் மட்டும் கூற, அவர் தனது மகளிடம் இதை இப்போது சொல்ல வேண்டாம், கல்யாணத்திற்கு பின்னர் ஒருநாளில் சொல்லி கொள்ளலாம் என்று கூறுகின்றார்.
 
இந்த நிலையில் திருமணமாகி கர்ப்பமாகும் மனிஷாவுக்கு ஒருநாள் தற்செயலாக தினேஷ் குப்பை அள்ளுபவர் என்பது தெரிந்து விடுகிறது. அதனால் அவரை வெறுக்கும் மனிஷா, பிரசவத்திற்காக தாய்வீடு செல்கிறார். குழந்தை பிறந்தவுடன் மனைவியை குப்பத்துக்கு அழைத்து செல்லாமல் ஒரு நல்ல அபார்ட்மெண்ட் வீட்டுக்கு அழைத்து செல்கிறார் தினேஷ். அங்கே எதிர்வீட்டில் இருக்கும் பணக்கார இளைஞர் அர்ஜூனுடன் மனிஷாவுக்கு நட்பு ஏற்படுகிறது. பின்னர் அதுவே ஒரு ஈர்ப்பாகி, அர்ஜூனுடன் குழந்தையோடு ஓடிப்போகிறார். அர்ஜூனை திருமணம் செய்யாமல் வாழும் மனிஷாவுக்கு திடீரென ஒரு சிக்கல் நேர்ந்துவிடுகிறது. இதனால் ஒரு கொலையும் விழுகிறது. அந்த சிக்கல் என்ன? கொலை செய்யப்பட்டவர் யார்? கொலையாளி யார்? மீண்டும் கணவருடன் இணைந்தாரா மனிஷா? போன்ற கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை உள்ளது.
 
நடன இயக்குனர் தினேஷூக்கு முதலில் பாராட்டுக்கள். தனக்கேற்ற கேரக்டரை தேர்வு செய்து முதல் படத்திலேயே பாஸ்மார்க் வாங்கிவிடுகிறார். யதார்த்தமான நடிப்பு இவரிடம் இயல்பாகவே இருப்பதால் நிச்சயம் ஒரு பெரிய நடிகராக வருவார்
 
மனிஷாவுக்கு நிலை தடுமாறும் பெண்ணின் கேரக்டர். வசதியில்லாத அழகில்லாத கணவருடன் வெறுப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போது திடீரென ஒரு அழகான, பணக்கார வாலிபனை பார்த்ததும் தடுமாறும் மனத்தை அழகாக வெளிக்காட்டியுள்ளார். கிளைமாக்ஸில் கணவனை விட்டு  வேறு ஒருவனுடன் ஓடிவந்துவிட்டால் நான் ஒண்ணும் .......இல்லை என்று ஆவேசத்துடன் பேசும் வசனத்தில் கைதட்டல் பெறுகிறார்.
 
யோகிபாபு, தினேஷின் அம்மா, அர்ஜூன் கேரக்டரில் நடித்த சுஜோ மேத்யூஸ், மனிஷாவின் அப்பாவாக நடித்தவர் என அனைத்து நடிகர்களையும் சரியாக வேலைவாங்கியுள்ளார் இயக்குனர். ஜோஸ்வாவின் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர். அதேபோல் அறிமுக இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தியின் பின்னணி இசையும் அருமை
 
சென்னை கூவம் அருகே உள்ள குப்பத்தை கண்முன் நிறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் மகேஷ். இயக்குனர் காளிரெங்கசாமியின் முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள். தினந்தோறும் செய்திகளில் படிக்கும் கள்ளக்காதல் என்பது நமக்கெல்லாம் ஒரு செய்திதான். ஆனால் கள்ளக்காதலால் மனைவியை தொலைத்த ஒரு இளைஞனுக்கு ஏற்படும் வலியை மிக இயல்பாக சரியான காட்சிகளுடன் திரைக்கதை அமைத்துள்ளார். 
 
மொத்தத்தில் தவறு செய்வது மனித இயல்பு என்றால் அதை மன்னிப்பது மாமனிதனுக்கு அழகு என்ற உயரிய கருத்தை சொல்வதே இந்த ஒரு குப்பைக்கதை திரைப்படம்
 
ரேட்டிங்: 3.5/5