புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: சனி, 5 ஜனவரி 2019 (13:01 IST)

அரசுடனான நல்ல உறவை விஷால் முறித்துவிட்டார் : அதிருப்தி தயாரிப்பாளர்கள்

சுயநலத்துக்காக  அரசுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இருந்த நல்ல உறவை விஷால் முறித்து விட்டதாக அதிருப்தி தயாரிப்பாளர்கள் கோஷ்டியைச் சேர்ந்த சிவா குற்றம்சாட்டியுள்ளார்.


 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷாலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய அதிருப்தி தயாரிப்பாளர்கள், சங்க கட்டடத்துக்கு பூட்டு போட்டதுக்காக விஷால் அளித்த நோட்டீஸை சட்டப்படி எதிர்கொள்ள தயார் என அறிவித்துள்ளனர். 
 
தியாகராயநகரில் இயங்கிய சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டதாக 29 தயாரிப்பாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விஷால் தலைமையிலான பட தயாரிப்பாளர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளது. விளக்கம் பெற்ற பிறகு அவர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்த நிலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ள தயாரிப்பாளர்களில் ஒருவரான டி.சிவா கூறும்போது, “விஷால் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அரசியல் ஆதாயத்துக்காகவும், சுயநலத்துக்காகவும் அரசுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இருந்த நல்ல உறவை முறித்து விட்டார். பொறுப்பில் இருப்பவர்கள் அரசுடன் ஒத்துப்போக வேண்டும். ஆனால் சுயநலத்தோடு விஷால் செயல்படுகிறார். எங்களை தகுதி நீக்கம் செய்ய விஷாலுக்கு தகுதி இல்லை. நோட்டீசை சட்டப்படி சந்திப்போம்” என்றார்.
 
தயாரிப்பாளர் கே.ராஜன் கூறும்போது, “விஷால் சங்கத்துக்கு தலைவரானபோது, கியூப் கட்டணத்தை குறைப்போம், திருட்டு வி.சி.டி.யை ஒழிப்போம் என்றார். ஆனால் எதையும் செய்யவில்லை. சங்க அறக்கட்டளையில் வைப்பு நிதியாக இருந்த ரூ.7 கோடியே 52 லட்சத்துக்கு கணக்கு இல்லை. எங்களை நீக்கினால் எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்” என்றார்.