திங்கள், 25 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: சனி, 26 அக்டோபர் 2024 (18:41 IST)

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை விஜய் கட்சி மாநாடு!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இதில் முதலாவதாக மாநாட்டு மேடைக்கு வரும் விஜய் அங்கிருந்தபடி, ரிமோட் மூலமாக 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.
 
கொடியேற்றிய பின், மாநாட்டு மேடையில் இருந்து தொண்டர்களை சந்திக்க, அங்கு சுமார் 600 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள 'ரேம்ப்'(நடைபாதை) மீது நடிகர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்திய பிறகே மாநாட்டு மேடைக்கு வர உள்ளார்.
 
மாநாட்டின் தொடக்கமாக பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். கலை நிகழ்ச்சிகள் முடிந்ததும், மாநாட்டுக்காக நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் மாநாட்டு பணிகளுக்கு உதவி செய்தவர்களுக்கு விஜய் சால்வை அணிவித்து கவுரவிக்கிறார்.
 
தொண்டர்கள் மத்தியில் அரசியல் உரை
 
அதன் பிறகு கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் பேச உள்ளனர். இவர்கள் பேசி முடித்ததும் மாநாட்டின் நிறைவாக கட்சியின் தலைவர் நடிகர் விஜய், அங்கு திரண்டு இருக்கும் தொண்டர்கள் மத்தியில் தனது அரசியல் பேச்சை பேச உள்ளார்.
 
மாநாட்டுக்கு விஜய்யை வரவேற்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் வாழ்த்து பதாகைகளை வழிநெடுக வைத்துள்ளனர். குறிப்பாக சென்னை-திருச்சி மார்க்கத்தில் வி.சாலை வரைக்கும் சாலை முழுவதும் வரவேற்பு பதாகைகள் அதிகளவில் காணப்படுகிறது. மேலும், வி.சாலை பகுதியே எங்கும் மஞ்சள், சிவப்பு கொடியுமாக காட்சி தந்து வண்ணமயமாக திகழ்ந்து வருகிறது.
 
இதற்கிடையே மாநாட்டு பாதுகாப்பு பணிகள் தொடர்பாக போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதற்கு வடக்கு மண்டல ஐ.ஜி.அஷ்ராகார்க் தலைமை தாங்கினார். 
 
இதில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷா மித்தல், விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் என்று போலீஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
 
நாளை மாநாடு நடைபெற உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்நோக்கி உள்ளனர். 
 
டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தமிழக வெற்றிக் கழகம், தளபதி விஜய் என்ற ஹாஷ்டேக்குகள் டிரெண்ட் ஆகி வருகிறது.