“தனுஷ் நம்பமுடியாத அளவுக்கு திறமையான நடிகர்…” ஹாலிவுட் நடிகர் பாராட்டு!
தி கிரே மேன் திரைப்படத்தின் நடிகர் ரியான் கோஸ்லிங் தனுஷை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
அவெஞ்சர்ஸ் இயக்குனர்களான ரஸ்ஸோ சகோதரர்கள் இயக்கும் நெட்பிளிக்ஸ் திரைப்படமான தி கிரே மேன் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ள நான்கு முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும் ஒருவர் என்ற அறிவிப்பு வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்து வரும் கதாபாத்திரம் குறித்த விபரங்களை எழுத்தாளர் மார்க் கிரேனி முன்னர் பகிர்ந்திருந்தார். அதில் “இந்த படத்தில் ரயான் காஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவனாக தனுஷ்” நடிக்கிறார் என்று பகிர்ந்திருந்தார்.
ஜூலை 22 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இப்போது அமெரிக்காவில் படத்தின் ப்ரிமீயர் படக்குழுவினருக்கு திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. அதில் நடிகர் தனுஷ் தனது மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவரோடு கலந்துகொண்டுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் படத்தின் கதாநாயகன் ரியான் கோஸ்லிங் “தனுஷ் நம்பமுடியாத அளவுக்கு திறமையான நடிகர். சண்டைக்காட்சிகளில் அவர் ஒருமுறை கூட தவறுகள் செய்யவில்லை. அவரை எனக்கு மிகவும் பிடித்துவிட்டதால் அவரை எதிரியாகவே நினைத்து நடிக்க முடியவில்லை. நாங்கள் அவருக்கு ரசிகர்களாக மாறிவிட்டோம். அவருக்கு இரண்டு பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள் உள்ளன.” எனக் கூறியுள்ளார்.