புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 6 ஜனவரி 2021 (23:51 IST)

எதிர்காலம் என்ற இலக்கு ! சிறப்புக் கட்டுரை

இவ்வுலகில் வாழ்கின்ற அனைத்துயிர்களும் ஒட்டுண்ணிகளைபோல் ஒன்றையொன்று பின்னிப்பிணைந்து இணைந்து வாழ்கின்றது. நாம் எதற்கும் அதிகப்படியான பற்றில்லாமல் வாழ்வோமேயானால் நம்மில் இலக்குகளுக்கும் நம்நட்பின் சகவாசங்களுக்கும் எந்தப் பிரச்சனைகளும் இல்லாமல் நம்மால் வாழமுடியும். ஆனால் எதிர்பார்ப்பு என்ற மரத்தின் மீது நாம் ஆசை ஊஞ்சலைக் கட்டியாட முயன்றால் சிலநேரங்கள் அது தகுதியற்ற கிளையாயிருக்குமானால் உடைந்துகீழே விழவும் வாய்ப்புண்டு.
நாம் என்ன செய்யவேண்டுமென்று நினைக்கும் முன்பே நாம் வசிக்கிற உலகம் நாம் எதன் மீது ஆசைகொள்ள வேண்டுமென்ற சமிக்ஞையை நம் மூளைக்கு அனுப்பிவைக்க்கும் பணியை மிக எளிதாகச் செய்கிறது. முந்தைய தலைமுறையைப் போலில்லாமல் இந்தத் தலைமுறை அசகாயச்சூரர்களாக இணையதள உதவியால் நவமனிதர்களின் போர்வையில் தொழில்நுட்பப் பங்காளர்களாகச் சமூக வலைதளங்களில் இணைந்து தம் கருத்துகளை ஆபாசமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் பதிவு செய்துவருகின்றனர். இதில் தேவையில்லாத வெறுப்பு ,வசை, மற்றும் ஆபாசக் கருத்துகளுக்குமட்டும்தான் நாம் விமர்சனங்களையும் கண்டனங்களையும் பதிவுசெய்யவேண்டுமே தவிர அவர்களின் சமூகவுணர்வுகருதி தேசநலன், மாநிலநலன் போன்ற கருத்துகளைமுன்வைத்து டுவிட்டரில் டிரெண்டிங் செய்யும்போதே அல்லது ஹேஸ்டேக் உருவாக்கி சில நல்ல புகைப்படங்களை சேர் செய்து மற்றவர்களை ஊக்குவிக்கும்போதே நாம் அதைப்பெருமையாகவே கருதலாம். ஆனால் சில நாட்களுக்கு முன் இதே சமூகவலைதளத்தில் ஒரு இளைஞர் புலனம் எனும் வாட்ஸ் ஆப்பில் ஒரு வீடியோ பதிவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் அவரை நம்பியுள்ள குடும்பமும் நண்பர்களும் இதே சமூக வலைதளத்தில் அவருடன் ஒட்டியுறவாடியவர்களும் அவருக்கு சரியான வழிமுறைகளைக் கூறாததைக் குறித்தும் நாமிங்குக் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.
புயல்காற்றடிக்கும்போது ஒரு திசைக்காட்டியும் வழிக்காட்டும் பாதாகைகளும் கீழே விழுந்துவிட்டால் புதிய ஊருக்குச் செல்பவர்களுக்கு எப்படிப் பாதை தெரியும்? அதுபோல் இந்த இணையதளச் சூறாவளி சுழன்றடிக்கும் போதெல்லாம் இன்றுள்ள நல்ல காலத்தைச் சிதைக்கும் நடவடிக்கையில் நம் இளைஞர்களின் கவனம் சற்றுத் தடுமாறுகிறது என்பதைக் கண்ணால் பார்க்கிறோம். அதுவயதுக் கோளாறு என்பதைக் காட்டிலும் இன்றையப் பொழுதை இன்றே தீர அனுபவித்துவிட வேண்டுமென்ற ஒரு தீராத ஆசைப்பேய் அவர்களை கவர்ந்திழுப்பதுவும் ஒரு காரணம். ஆனால் நாளைய தினத்தையும் நாளைக்கு அடுத்து நாம் உயிர்வாழ வேண்டியதைத் தாண்டியும், நாம் நமக்குப் பிடித்தத் துறையில் நாமொன்றைச் சாதிக்க வேண்டியதையும், அதன்மூலம் இச்சமுதாயத்தில் அப்துல்கலாம்போல் நம் சாதனைக் கோபுரத்தைக் கட்டியெழுபிடவேண்டியும் கிடைத்துள்ள நாட்களே இன்றைய பொன்னான பொழுதுகள் என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்?
கையில் எடுத்தவுடன் ஒரு புத்தகத்தின் தாள்களைத் திருப்புவதுபோல் வெகுஎளிதிலேயே எதிர்க்காலக்கனி கனிந்துவிடாது. அதற்கு நாம் இன்றைய நாட்கள் எனும் மரத்திற்கு நம் உழைப்பெனும் உரத்தைப் போட்டு, நம் வியர்வை எனும் நீரூற்றவேண்டியதும் அவசியம்.
அக்காலத்தைப் போலல்லாமல் இன்று நமது உண்மையான நல்ல காரியத்தைத் தவிர சிலவற்றை மறைத்துப் பல போலியான பிம்பத்தைக் கட்டி எழுப்பக் கேமராசெல்போனால் படம் பிடித்துச் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒருசில புகைப்படங்களுக்கு மிகச்சொற்பமான லைக்குகளும் ஷேர்களும், கமெண்டுகளும் கிடைத்திடவேண்டி நாம் செய்யும் சில மணிநேர உழைப்புகளை நம் எதிர்கால வளர்ச்சிக்குத் திசைமாற்றினால் எந்த இணையதளச் சூறாவளியும் நம் கவனப்போக்கை அசைத்துப்பார்க்க முடியாது என்பது என் கருத்து.
படைப்பாக்கத்திற்காகவே படைக்கப்பட்டது போலுள்ள நம் மூளையில் தோன்றும் சிந்தனைகள் ஆக்கத்திற்காகப் பயன்படுத்தும்போது, நம் வெற்றியின் விழுமியங்கள் என்பது நம் சட்டைப்பாக்கெட்டைத் தாண்டித் துடிக்கும் இதயத்தில் ஒலிப்பாகவும், கையில் மணிக்கட்டில் கட்டிய விலைஅதிகமோ குறைவோ அதன் நொடிமுள் ஓடுவதுபோல் நாமும் நம் எதிர்காலம் என்ற இலக்கை அடையவே நமது அற்புத உழைப்பை நோக்கிச் செல்லத்துவங்கிவிடுவோம்.