உலகின் சிறந்த ஆயிரம் படங்களில் சூரரை போற்று! – ஐஎம்டிபி ரேட்டிங்கால் ரசிகர்கள் மகிழ்ச்சி
உலகளாவிய திரைப்பட ரேட்டிங் தளமான ஐஎம்டிபியில் சூர்யாவின் சூரரை போற்று சிறந்த ஆயிரம் படங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் சூரரை போற்று. இந்த படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக ஓடிடி தளத்தில் வெளியானது. தொடர்ந்து ஆஸ்கர் விருதுகளுக்கு சென்று பரிந்துரை பட்டியல் வரை முன்னேறியது.
இந்நிலையில் தற்போது உலகளாவிய திரைப்பட ரேட்டிங் தளமான ஐஎம்டிபி எனப்படும் இண்டர்நேஷனல் மூவி டேட்டா பேஸ் வெளியிட்டுள்ள உலகில் அதிக ரேட்டிங் பெற்ற 1000 படங்கள் பட்டியலில் சூரரை போற்று 3ம் இடத்தை பெற்றுள்ளது. முதல் இரண்டு இடங்களில் வழக்கம்போல ஷஷாங்க் ரெடெம்ஷன், காட்பாதர் படங்கள் இடம்பெற்றுள்ளன. ஐஎம்டிபி ரேட்டிங்கில் தமிழ் படம் ஒன்று மூன்றாம் இடம் பிடித்திருப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.