கின்னஸ் சாதனை படைத்த பிரபல பின்னணி பாடகி மருத்துவமனையில் அனுமதி
‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றழைக்கப்படுபவரும் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை புரிந்தவருமான பிரபலப் பாடகி லதா மங்கேஷ்கர் மூச்சுத்திணறல் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்,.
இந்தி, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை புரிந்த லதா மங்கேஷ்கர், கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி தனது 90-வது பிறந்தநாளை லதா கொண்டாடினார். அவருக்கு இந்திய திரையுலகமே வாழ்த்து தெரிவித்தது
இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தபோதிலும், அவருடைய உறவினர் ஒருவர் லதா மங்கேஷ்கர் நல்ல நிலையில் இருப்பதாகவும், விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பத்மபூஷன், பத்மவிபூஷன், உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள லதா மங்கேஷ்கர் 36 இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் சுமார் 30ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிக பாடல்களை பாடியதற்காக இவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது