1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Senthil Velan
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2024 (13:59 IST)

பாலியல் தொந்தரவு - ஜானி மாஸ்டர் சஸ்பெண்ட்.! தெலுங்கானா ஃபிலிம் சேம்பர் அதிரடி.!!

பாலியல் புகார் எதிரொலியாக, தெலுங்கானா நடன இயக்குனர் சங்கத்திலிருந்து டான்ஸ் மாஸ்டர் ஜானி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
 
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடன இயக்குநராக இருப்பவர்தான் நடன இயக்குநர் ஜானி. தனுஷ் நடித்த மாரி 2 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு எண்ட்ரி கொடுத்தார். சமீபத்தில் அரபிக் குத்து, ஜாலி ஓ ஜிம்கானா, ரஞ்சிதமே, காவாலையா என பல பிரபல தமிழ் பாடல்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி உள்ளார். 
 
தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் “மேகம் கருக்காதா” என்ற பாடலுக்கு நடனம் இயக்கி, இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட தேசிய விருதில் இடம்பெற்றுள்ளார்.  இந்நிலையில் இவர் மீது, 21 வயது சக பெண் நடனக்கலைஞர் ஒருவர் பாலியல் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
ஆந்திர மாநில திரைப்பட பெண் நடனக் கலைஞர்  ஒருவர் அளித்த புகாரின் பேரில், ராயதுர்கம் காவல் துறையினர், இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவு 376, பிரிவு 506, பிரிவு 323 ஆகிய பிரிவுகளின் கீழ் ஜானி மாஸ்டர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 
இந்த பாலியல் புகார் எதிரொலியாக, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இருந்த ஜானி நீக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது தெலுங்கானா நடன இயக்குனர் சங்கத்திலிருந்து டான்ஸ் மாஸ்டர் ஜானி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.