டகால்டி போஸ்டர் சர்ச்சை – மன்னிப்புக் கேட்ட சந்தானம் !
டகால்டி படத்தின் போஸ்டர்களில் சந்தானம் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பது குறித்து நடிகர் சந்தானம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
ரஜினி, அஜித், விஜய் ஆகியக் கதாநாயகர்கள் தங்கள் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்தாலோ அல்லது அதுபோன்ற போஸ்டர்களை வெளியிட்டாலோ முதல் ஆளாக கண்டனம் தெரிவிப்பர் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ். இதனால் நடிகர்களின் ரசிகர்களுக்கும் பாமக வினருக்கும் இடையில் பலமுறை வாக்கு மோதல்கள் எழுந்துள்ளன. அதேப்போல சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் டகால்டி படத்தின் போஸ்டர்களில் சந்தானம் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றது சர்ச்சையைக் கிளப்பியது. அதேப்போல் அதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவிக்காததற்கும் பல காரணங்கள் கூறப்பட்டன.
இந்நிலையில் பற்றி எரியும் சர்ச்சைகளில் தண்ணீர் ஊற்றுவது போல சந்தானம் இந்த விஷயம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டரில் ‘டகால்டி போஸ்டர் கவனக்குறைவாக வெளியிடப்பட்டுள்ளது. அது புகைப்பழக்கத்தை ஊக்குவிக்கும் என்பதை இப்போது உணர்ந்துள்ளோம். என்னுடைய வருங்கால படங்களில் இந்த தவறு நடக்காமல் இருக்கும் என உறுதி அளிக்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.