விஜய் பட பார்க்க வந்தபோதும் எங்களை உள்ளே விடவில்லை… பாதிக்கப்பட்ட பெண் கருத்து!
இன்று ரிலீசான சிம்புவின் பத்து தல என்ற திரைப்படத்தை ரோகிணி தியேட்டரில் காண வந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை உள்ளே விடாமல் தீண்டாமை கொடுமை ஏற்பட்டதை அடுத்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். பத்து தல படத்தின் முதல் காட்சிக்கு டிக்கெட் எடுத்திருந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இருவர் படம் பார்க்க வந்தபோது அவர்களை உள்ளே விட ரோகிணி தியேட்டர் நிர்வாகிகள் மறுத்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி கடுமையான விமர்சனங்களை பெற்றது.
இதையடுத்து அவர்களை உள்ளே அனுமதித்த வீடியோவை தியேட்டர் நிர்வாகம் வெளியிட்டது. மேலும் அனுமதிக்காததற்குக் காரணம் படம் யு ஏ சான்றிதழ் என்பதால் குழந்தைகளை அனுமதிக்க மறுத்ததாகவும் விளக்கம் அளித்தது. ஆனாலும் இந்த விளக்கங்களை ஏற்காத நெட்டிசன்கள் திரையரங்க நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர், ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் “இதற்கு முன்னர் விஜய் படம் பார்க்க வந்தபோதும், இந்த தியேட்டரில் எங்களை உள்ளே விடவில்லை” எனப் பேசியுள்ளார். இதன் மூலம் சம்மந்தப்பட்ட தியேட்டரில் தொடர்ந்து சாதிய பாகுபாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருவது உறுதியாகியுள்ளது என மேலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.