பாபாஜி குகைக்கு 55 நாட்கள் நடந்து சென்ற இளைஞருக்கு உதவிய ரஜினி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸானது.
இந்த பட ரிலீஸுக்கு முன்பே ரஜினிகாந்த் இமயமலைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார்.
சுதந்திரதினக் கொண்டாட்டத்தை ஒட்டி , துவாரஹாரத்தில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்தில் நேற்று நடிகர் ரஜினிகாந்த், ஆசிரம சுவாமிஜியுடன் இணைந்து தேசிய கொடி ஏந்தினார்.
அங்குள்ள ஆதி பத்ரிநாத் கோயிலில் 3000 ஆண்டு கால பழமையான சுயம்பு மகாவிசஷ்ணுவையும் அவர் வழிபட்டார்.
இந்த ஆன்மீகப் பயணத்தில், ரஜினிகாந்த் ஆன்மிக துறவிகளை சந்தித்து ஆசி பெறுகிறார். சாலையோரம் உள்ள ஓட்டல்களில் பொங்கல் வாங்கி சாப்பிட்டு, டீ குடிக்கிறார். இரவில் ஆசிரமங்களில் தங்குகிறார்.
இந்த நிலையில், பக்ரி நாத் கோயிலுக்குச் சென்று ரஜினி வழிபட்டார். அவரை கண்ட பக்தர்கள் அவரை ஜெயிலர் என்று குரல் எழுப்பினர். அதன்பின்னர், அவரைப் பாதுகாப்பாக கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். அங்குள்ள வியாசர் குகைக்குச் சென்று அவர் தியானம் மேற்கொண்டார்.
இந்த நிலையில், இளைஞர் ஒருவர் சென்னையில் இருந்து மகாவதார் பாபாஜி குகைக்கு 55 நாட்கள் நடந்து சென்று ரஜினிகாந்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
இதுபற்றி, அர்ஜூனமூர்த்தி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இந்த இளைஞர் சென்னையில் இருந்து மகாவதார் பாபாஜி குகைக்கு 55 நாட்கள் நடந்து சென்று நம் அன்புத் தலைவர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தார்.
தலைவர் அவருக்கு பண உதவி செய்தார். மேலும் குளிர்ந்த காலநிலையில் ஒரு மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்த அவரை இப்போது ஒரு சன்யாசியுடன் ஒரு சிறிய இடத்திற்கு மாற்ற உதவினார் என்று தெரிவித்துள்ளார்.