1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (08:34 IST)

விஜய் நடிக்கும் 'கோட்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இருபத்தைந்தாவது படமாக தயாராகி, தளபதி விஜய் நடிப்பில் உருவாகி, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'கோட்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 
 
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ்,  கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' ('கோட்') திரைப்படத்தில் தளபதி விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு , வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் அசோசியேட் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆவர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். 
 
ஆக்சன் எண்டர்டெயினராக தயாராகி செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் 'கோட்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். 
 
'கோட்' திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், ''எங்கள் நிறுவனத்தின் 25வது படமாக 'கோட்' உருவாகி இருக்கிறது.‌ தளபதி விஜய்யுடன் 'பிகில்' படத்திற்குப் பிறகு நாங்கள் இணைந்திருக்கும் இரண்டாவது திரைப்படம்.‌‌ இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. எங்கள் நிறுவனத்திற்காக வெங்கட் பிரபு இயக்கும் முதல் படம் இது. 
 
இப்படத்தின் பணிகள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் நடைபெற்றன. படமும் நன்றாக வந்திருக்கிறது. இந்த திரைப்படம் தொழில்நுட்ப ரீதியில் மிகவும் வலுவான படைப்பு. ஏராளமான வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். விஜய் சார் நடிக்கும் படத்தில் அதிகளவு வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட படம் இதுதான். 
 
இந்த தருணத்தில் படத்தின் முன்னோட்டத்தை உங்களுக்காக திரையிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் நிறுவனத்திற்கும், இந்த திரைப்படத்திற்கும் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்என்றார். 
 
இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், ''என்னுடைய திரையுலக பயணத்தில் இது மறக்க முடியாத பயணம்.‌ இந்த படத்தின் பணிகள் எப்படி தொடங்கியது, எப்படி நிறைவடைந்தது என்றே தெரியவில்லை. இதற்காக அர்ச்சனா கல்பாத்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரை முதன்முதலாக சந்தித்து இந்த கதையை விவரித்தேன். அப்போது அவரும் ஆர்வமாகி இந்த படைப்பை உருவாக்குவது குறித்து விவாதிக்க தொடங்கினார். 
 
பின்னர் விஜய்யை சந்தித்து கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது.‌ அதன் பிறகு விஜய் - ஏஜிஎஸ் நிறுவனம் இருவரும் இணைந்தார்கள். கதையைக் கேட்டு ரசித்த தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரம் அவர்கள், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 25வது படத்திற்காக விஜய்யுடன் மீண்டும் இணைவது மிக்க மகிழ்ச்சி. செலவைப் பற்றி கவலைப்படாமல் உலகத் தரத்திலான படத்தை உருவாக்குங்கள் என்றார். இதனால் பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் பெரிதாக யோசிக்கத் தொடங்கினேன்.‌ 
 
இந்தப் படத்திற்காக படப்பிடிப்பு தளத்தை பார்வையிடுவதற்காகவே இஸ்தான்புல் நகரத்திற்குச் சென்றோம். ஆனால் அங்கு பணியாற்ற முடியாத சூழல் இருந்தது. அதனால் படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்தினோம்.  நாங்கள் படப்பிடிப்பை நடத்திய காலத்தில் அந்த நாட்டில் பெரிய பிரச்சினை நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு அனுபவம் மறக்க முடியாதது. 
 
இந்தப் படத்தினை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் தான் தொடங்கினோம். இந்த படத்திற்காக உலகத்தில் சிறந்த தொழில்நுட்ப நிறுவனமான 'லோலா' உடன் இணைந்தோம்.  இந்நிறுவனம் ஏராளமான ஹாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறது.  இவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் முதலில் சற்று தயக்கம் இருந்தது. ஏனெனில் வித்தியாசமாக யோசித்த விசயத்தை எப்படி சாத்தியப்படுத்துவது? இதற்காக என்னுடைய குழுவினருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
படத்தில் ஆக்ஷன் காட்சிகள் நிறைய உண்டு. இதனால் திலீப் மாஸ்டர் கடுமையாக உழைத்திருக்கிறார்.‌ ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா-  கலை இயக்குநர் ராஜீவன் - ஆடை வடிவமைப்பாளர் பல்லவி சிங் மற்றும் வாசுகி பாஸ்கர், கதாபாத்திரத்தை வடிவமைத்த மும்பையை சேர்ந்த பிரீத்தி ஷீல் சிங்- இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-  என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது அனைத்து பாடல்களும் உங்களுக்கு பிடிக்கும், அனைத்தும் விஷுவல் ட்ரீட் ஆகவும் இருக்கும். 
 
படத்தின் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர்  படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டினார்கள்.‌ இது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.  அவர்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி. 
 
விஜய்யை தவிர பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, யோகி பாபு ,மீனாட்சி என ஏராளமானவர்கள் நடித்திருக்கிறார்கள். இதுபோன்ற மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் அனைவரும் இணைந்து நடிப்பதற்காக ஒப்புக்கொண்டது பெரிய விஷயம். இதுவே எனக்கு மகிழ்ச்சியையும் தந்தது. 
 
இந்தப் படம் ஒரு நேர்த்தியான, கமர்ஷியலான எண்டர்டெயின்மென்ட் படம். விஜய் சாரை இது போன்றதொரு கமர்சியலான படத்தில் பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அது நிறைவேறி இருக்கிறது. படத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமில்லாமல் கதையும் இருக்கிறது. 
'கோட்' செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.‌ 
 
இது விஜய் சார் படம் என்றாலும் அனைவரும் இதில் தங்களுக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதே சமயத்தில் முக்கியத்துவம் இருந்தால்தான் அவர்கள் நடிக்க ஒப்புக் கொள்வார்கள். அதனால் இந்த படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. 
 
படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தணிக்கைக்காக படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. 
 
இந்தப் படத்தில் முதன் முதலாக வசனகர்த்தா விஜியுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். 
 
இந்தப் படம் விஜய்யின் ரசிகர்களுக்கு ஸ்பெஷலான விருந்தாக இருக்கும். 'கோட்' பக்கா கமர்ஷியலான திரைப்படம் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் வகையில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. எந்த இடத்திலும்  முகத்தை சுழிக்கும் காட்சிகள் இல்லை. இந்த படத்தை பார்த்துவிட்டு ஆசியையும், ஆதரவையும் வழங்குங்கள்,'' என்றார்