தனுஷ் படத்துடன் ’டிராகன்’ போட்டியா?... பிரதீப் ரங்கநாதன் அளித்த பதில்!
ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளன.
ப்ரதீப் நடித்த லவ் டுடே படம் போலவே இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் ப்ரதீப் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது டிராகன் ரிலீஸாகும் அதே நாளில் தனுஷ் இயக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் ரிலீஸாவது குறித்து தனுஷுடன் போட்டியா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த பிரதீப் “போட்டி எல்லாம் இல்லை. தேதி அப்படி அமைந்துவிட்டது. நாங்கள் பிப்ரவரி 14 ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டிருந்தோம். ஆனால் விடாமுயற்சி ரிலீஸால் தள்ளிவைக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது” எனக் கூறியுள்ளார்.