புதன், 25 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2024 (07:34 IST)

திருப்பதி லட்டு சம்மந்தமான பரிதாபங்கள் வீடியோ நீக்கம்… மன்னிப்பு கேட்ட கோபி & சுதாகர்!

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு விவகாரம் தற்போது தென்னிந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக சிறப்பு விசாரணை குழுவை அமைத்து ஆந்திர அரசு  உத்தரவிட்டுள்ளது.  ஆந்திர அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், குண்டூர் சரக ஐ.ஜி. சர்வ ஷரஸ்தா திரிபாதி தலைமையில் டி.ஐ.ஜி., மற்றும் ஒரு எஸ்.பி., மற்றும் இரு டி.எஸ்.பி.க்கள், ஒரு இன்ஸ்பெக்டர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், ஒரு நிகழ்ச்சியில் கார்த்தி நகைச்சுவையாக திருப்பதி லட்டு பற்றி பேசிய விவகாரத்தை அரசியல் ஆக்கியதை அடுத்து கார்த்தி தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டார்.

இதையடுத்து தமிழின் பிரபலமான யுடியூப் சேனலாக இருக்கும் பரிதாபங்கள் சேனலில் லட்டு பரிதாபங்கள் என ஒரு எபிசோட் ஒளிபரப்பானது. அந்த வீடியோவில் அசைவ உணவுண்பவர்களை அருவருப்பாக பார்ப்பவர்கள், திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு சேர்க்கப்பட்டது, இது சம்மந்தமாக பவண் கல்யாணின் நடவடிக்கைகள் ஆகியவற்றை கேலி செய்திருந்தனர். இந்த வீடியோ வெளியாகி வைரல் ஆனதை அடுத்து தற்போது திடீரென இந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக பரிதாபங்கள் சேனலின் சமூகவலைதளப் பக்கத்தில் “கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை. அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருப்பதால்.. அதற்கு வருத்தம் தெரிவித்து அந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது. இதுபோல வருங்காலங்களில் நடைபெறாது எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர். இதனால் அந்த வீடியோ சம்மந்தமாக கோபி & சுதாகர் மிரட்டப்பட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.