பிரபுதேவாவை திருமணம் செய்ய நான் ரெடி - நிகிஷா பட்டேல் அதிரடி
நடிகரும், இயக்குனருமான பிரபுதேவாவை திருமணம் செய்ய தான் தயாராக இருப்பதாக நடிகை நிகிஷா பட்டேல் கூறியிருப்பது தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வில்லைப் போல் வலைந்து நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்த பிரபுதேவா ராம்லாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்நிலையில்தான் அவரின் மூத்தமகன் 2008ம் ஆண்டு புற்றுநோயால் மரணமடைந்தார். அப்போது, அவரின் மனதுக்கு மருந்து தடவும் ஆறுதலாக நயன்தாரா நடந்து கொள்ள இருவரும் நெருக்கமாக பழகினர். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அவருக்காக தனது மனைவியை பிரபுதேவா விவாகரத்து செய்தார். ஆனால், எதோ காரணத்தால் நயன்தாராவும், பிரபுதேவாவும் பிரிந்து விட்டனர்.
தற்போது நடிப்பு, இயக்கம் என பிரபுதேவா பிஸியாகிவிட்டார். இந்நிலையில், நாரதன், என்னமோ ஏதோ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை நிகிஷா பட்டேல் தற்போது கஸ்தூரி ராஜா இயக்கத்தில் பாண்டிமுனி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
அந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிகிஷா பட்டேல் கலந்து கொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது “ ஹீரோக்களில் பலரையும் எனக்கு பிடிக்கும். குறிப்பாக பிரபுதேவாவை மிகவும் பிடிக்கும். அவரது குடும்பமும், எங்கள் குடும்பமும் நட்பாக பழகி வருகிறோம். அவருடன் நடிப்பீர்களா? என என்னிடம் கேட்கிறார்கள். ஆனால், அவரை நான் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன்” என அதிரடியாக கூறி அதிர வைத்தார்.