1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (15:11 IST)

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..! 4 விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன்.!!

National Award
சிறந்த தமிழ்த் திரைப்படம் உள்ளிட்ட நான்கு தேசிய விருதுகளை மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
 
70-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சிறந்த தமிழ்த் திரைப்படமாக தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன்-1 தேர்வு செய்யப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு, சிறந்த படம், சிறந்த பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு என 4 பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக ஏ.ஆர். ரகுமானுக்கு சிறந்த இசை அமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஒளிப்பதிவுக்கு ரவி வர்மனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதே போல, சிறந்த நடிகைக்கான விருது திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடன காட்சிகளுக்காக திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காதா பெண்ணே..பெண்ணே’ என்ற பாடலுக்காக ஜானி மாஸ்டருக்கு சிறந்த நடன மாஸ்டர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சிறந்த சண்டைக் காட்சிகளுக்கு கேஜிஎஃப் 2 படத்திற்காக அன்பறிவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அளவில் சிறந்த திரைப்படமாக மலையாளத்தில் வெளியான 'ஆட்டம்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 
சிறந்த நடிகருக்கான விருதுக்கு கன்னட மொழியில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற காந்தாரா படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டியும், 12 பெயில் படத்தில் நடித்த விக்ராந்த் மாசேவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த பாடகியாக சௌதி வெள்ளக்கா படத்திற்காக பாம்பே ஜெயஸ்ரீக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த திரைப்பட புத்தகமாக கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த அனிமேஷன் படமாக 'ஏ கோகனட் ட்ரீ' தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 
சிறந்த புதுமுக இயக்குநர்- பஸ்தி தினேஷ் ஷெனாய்-மத்யாந்தரா,  சிறந்த திரைப்பட விமர்சகர்  தீபக் துவா, சிறந்த நான் ஃபீச்சர் படம் அயனா, சிறந்த தெலுங்கு படம் கார்த்திகேயா 2,  சிறந்த பஞ்சாபி படம் பாகி தி தீ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 
சிறந்த ஒடியா படம் தமன், சிறந்த மலையாளம் படம் சவுதி வெள்ளக்கா சிசி. 225/2009,  சிறந்த மராத்தி படம் வால்வி, சிறந்த கன்னட படம் கே.ஜி.எஃப் 2,  சிறந்த இந்தி படம் குல்மோஹர் ஆகிய படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
 
சிறந்த ஆடை வடிமைப்பாளர் கட்ச் எக்ஸ்பிரஸ்- நிக்கி ஜோஷி,  சிறந்த சவுண்டு டிசைன் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி,  சிறந்த பாடகர் ஆர்ஜித் சிங் - பிரம்மாஸ்திரா சிறந்த துணை நடிகை- ஊன்சாய்- நீனா குப்தா, சிறந்த துணை நடிகர்- பவன் ராஜ் மல்ஹோத்ரா-ஃபவ்ஜா, சிறந்த இயக்குநர்- ஊன்சாய்- சூரஜ் பர்ஜாத்யா ஆகியோருக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன