புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 30 அக்டோபர் 2018 (18:04 IST)

விடாது துரத்தும் கதைதிருட்டு சர்ச்சைகள் – பதில் சொல்வாரா முருகதாஸ்?

சர்கார் கதை திருட்டு விவகாரம் இன்று சமாதானமாக முடிவடைந்துள்ள நிலையில் சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் மீதான கதை திருட்டு புகார் கூறப்படுவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே கத்தி படத்தின் வெளியீட்டின் போது அறம் இயக்குனர் கோபி நயினார் கத்தி தன்னுடைய கதை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்கார் கதை விவகாரமும் கத்தி கதை விவாதமும் நீதிமன்றத்திற்கு சென்றதால் பெரிய அளவில் கவனம் பெற்றது. ஆனால் அதிகமாக வெளியே தெரியாமல் போன சில கதை திருட்டு புகார்களும் கடந்தகாலங்களில் முருகதாஸ் மீது சுமத்தப்பட்டுள்ளன. சினிமா வட்டாரத்தில் மட்டுமே புழங்கும் இந்த சம்பவங்கள் சினிமா ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியளிக்கக்கூடியவை.

முருகதாஸ், விஜயகாந்தை வைத்து இயக்கிய ரமணா படத்தில் மருத்துவமனையில் இறந்து போனவருக்கு சிகிச்சை அளிக்கும் காட்சி மிகப் பிரபலம். அந்த காட்சிகள் அனைத்தும் அப்போதைய உதவி இயக்குனர். நந்தகுமாரன் தனது படத்திற்காக யோசித்திருந்த காட்சிகளாம். பேச்சுவாக்கில் அதை முருகதாஸிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் அவரது அனுமதி இன்றி ரமணா படத்தில் அந்த காட்சியை சொருகிவிட்டாராம் முருகதாஸ். இதைப் படம் பார்த்து தெரிந்துகொண்ட நந்தகுமாரன் விஜயகாந்திடம் சென்று முறையிட்டிருக்கிறார். அதனால் அவர் மேல் பரிதாபப்பட்ட விஜயகாந்த் அவருக்கு தென்னவன் படத்தை இயக்கும் வாய்ப்பளித்தாக சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு உள்ளது.

அடுத்ததாக முருகதாஸ் இயக்கிய கஜினிப் படம் ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய மெமண்டோ படத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பது உலகறிந்த வரலாறு. அது தமிழில் வெற்றி பெற்றதையடுத்து தைரியமாக இந்தியிலும் ரீமேக் செய்து இந்தி திரையுலகில் கால்பதித்தார். அந்த படத்தைப் பார்த்து அதிர்ந்த நோலன் தனக்கு கிரடிட்ஸ் கூட கொடுக்கவில்லை என வருத்தப்பட்டதாக பாலிவுட் நடிகர் அனில் கபூர் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதன் பின்னால் முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு மற்றும் கத்திப் படங்களின் கதைகள் தன்னுடையவை என்றும் அதை முருகதாஸ் திருடிவிட்டார் என்றும் அறம்பட இயக்குனர் கோபி புகார் கூறினார். புகார் கூறியது மட்டுமல்லாமல் வழக்கும் தொடுத்தார். அப்போதுதான் முருகதாஸ் மீதான கதை திருட்டு விவகாரம் வெளி உலகுக்கு தெரிய ஆரம்பித்தது. தங்கள் பக்கம் உண்மை இருந்தால் பொதுமேடையில் விவாதத்துக்கு வரத் தயாரா? எனவும் கோபி கேள்வியெழுப்பினார். ஆனால் அப்போது அந்த அறைகூவலை சாதியப் பிரச்சனையாக திசைதிருப்பி விட்டார் முருகதாஸ். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தனது வழக்கறிஞர் செய்த துரோகத்தால் வழக்கில் வெல்ல முடியாமல் போனார் கோபி.

மேலும் அன்புசேகர் என்பவர் தன்னுடைய குறும்படமான தாகபூமியைத்தான் கத்திப் படமாக முருகதாஸ் எடுத்திருக்கிறார் என தஞ்சாவூரைச் சேர்ந்த அன்பு ராஜசேகர் என்பவர் வழக்கு தொடுத்து உண்ணாவிரதப் போராட்டம் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். அது எப்படி ஒரே கதைக்கு இரண்டு பேர் சொந்தம் உரிமைக் கோரமுடியும் என கேள்வி எழாமலில்லை. அதற்கு விவரமறிந்தோர் இரண்டு வெவ்வேறு கதைகளை எடுத்து அதை ஒரே கதையாக மாற்றமுடியும் என்கின்றனர். எடுத்துக்காட்டாக கத்தி படத்தில் இரண்டு விஜய் கேரக்டர்களுக்கும் பின்னணியில் இரண்டு கதைகள் இருக்கும். அவையிரணடையும் ஒன்றிணைக்கும் போது அந்த கதை வேறொரு வடிவத்தைப் பெறும் என்கிறார்கள்.

இப்போது சர்கார் விவகாரத்தில்தான் முதன்முதலாக பாதிக்கப்பட்டவருக்கு சாதகமான முடிவெடுக்கப்பட்டுள்ளது. விஜய், சன்பிக்சர்ஸ், ஏ ஆர் முருகதாஸ் ஆகியபெரும்புள்ளிகளுக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றிருக்கிறார் உதவி இயக்குனர் ராஜேந்திரன். அவரின் இந்த வெற்றியில் தமிழ் திரை எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பாக்யராஜுக்கும் ஒரு முக்கியப் பங்குண்டு. பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக கடிதம் அளித்தது முதல் அவருக்கு ஆதரவாக கோர்ட் வரை வந்து குடும்பத்தையும் எதிர்த்துகொண்டு போராடிய அவருக்கு உதவி இயக்குனர்கள் தங்கள் நன்றியையும் பாராட்டையும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

சரி இதுபோன்ற கதைதிருட்டு விவகாரங்கள் தமிழ்த் திரை உலகில் மட்டும் நடப்பதற்கான காரணம் என்ன யோசித்தால், உதவி இயக்குனர்கள் தங்கள் கதைகளை நண்பர்களிடமும் தயாரிப்பு நிறுவனங்களிடமும் பகிர்ந்து கொள்வதின் மூலமாகவும் கதை விவாத்தில் ஈடுபடும்போது இதுபோன்ற கதை திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பல உதவி இயக்குனர்கள் தங்கள் கதைகளை சங்கத்தில் பதிவு செய்வதில்லை. அதனால் இதுபோன்ற பிரச்சனைகளின் போது பாதிக்கப்படுபவர்களுக்கு சாதகமான முடிவு எடுக்க முடியாமல் போகிறது என்கின்றனர் சங்க நிர்வாகிகள்.

மேலும் இதுபோன்ற பிரச்சனைகளை தடுக்கவேண்டிய திரை எழுத்தாளர்கள் சங்கம் வலுவான ஒரு அமைப்பாக இதுவரை இயங்கவில்லை பேருக்காகவே இதுவரை இயங்கி வந்துள்ளது. இதற்கு முன்னர் வந்த புகார்கள் எதுவும் நடுநிலையோடு விசாரிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். மேலும். பாக்யராஜ் இரண்டும் கதையின் சாராம்சமும் ஒன்றுதான் எனக்கூறி சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தப்போது வழக்கை கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் முருகதாஸ். பெரிய இயக்குனர் என்ற கர்வத்தில் சங்கத்துக்கு கட்டுப்பட மறுத்திருக்கிறார் முருகதாஸ்.

எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளை தடுக்க சங்க விதிமுறைகளை கடுமையாக்கி கட்டுப்பாடுகளை உருவாக்கும் முயற்சியில் தலைவர் பாக்யராஜ் இப்போது இறங்கியிருக்கிறார். அதுபோல எழுத்தாளர்கள் சங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு மற்ற சங்கங்களும் ஒத்துழைக்க வேண்டுமென பாக்யராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.