தன்னை நடிக்கவிடாமல் தயாரிப்பாளர் சங்கம் தடுப்பதாக சிம்பு குற்றச்சாட்டு
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் சிம்பு `செக்கச் சிவந்த வானம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மணிரத்னம் படத்தில் தன்னை நடிக்கவிடாமல் தயாரிப்பாளர் சங்கம் தடுப்பதாக சிம்பு குற்றம்சாட்டியுள்ளார்.
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் AAA. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்த இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். இப்படம் சரியாக ஓடாததற்கு சிம்புதான் காரணம் என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் குற்றம்சாட்டினார்கள். இதையடுத்து சமீபத்தில் சிம்பு - ஆதிக் ரவிச்சந்திரன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த நிலையில், என்னை நடிக்க விடாமல் தயாரிப்பாளர் சங்கம் தடுக்கிறது என்று நடிகர் சிம்பு குற்றம்சாட்டியிருக்கிறார். அதில், நடிகர் சங்கத்தில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து எனக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கான பதிலை நடிகர் சங்கத்துக்கு தெரிவித்துவிட்டேன். இதுகுறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கையை நடிகர் சங்கம் எடுக்கலாம். ஆனால் அதை செய்யாமல் மணிரத்னம் படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது, தினமும் போன் செய்து தொல்லை கொடுக்கிறார்கள். சிம்புவை வைத்து படம் எடுக்காதீர்கள் என்று படத் தயாரிப்பாளருக்கு இடைஞ்சல் கொடுக்கிறார்கள்.
இதுகுறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் பொன்வண்ணன் மற்றும் கருணாஸ் உடன் பேசி அவர்களிடம் விளக்கிவிட்டேன். இவ்வாறு கூறியுள்ளார்.