எம்.எஸ் ராஜேஸ்வரி மறைவுக்கு கமல் இரங்கல்
சென்னையில் நேற்று உடல் நலக்குறைவால் காலமான பழம்பெரும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரியின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நாம் இருவர் படத்தில் ’காந்தி மகான்‘ என்ற பாடல் மூலம் அறிமுகமானவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படத்தில் 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' என்ற பாடலை பாடினார். இந்த பாடல் மட்டுமின்றி பல குழந்தை நட்சத்திரங்களுக்காக பல பாடல்களை இவர் பாடியுள்ளார்.
மேலும் காதல் பாடல் முதல் பக்தி பாடல்கள் வரை சுமார் 500க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார். இவர் கமல்ஹாசன் நடித்த 'நாயகன்' என்ற படத்திற்காக பாடிய 'நான் சிரித்தால் தீபாவளி' என்ற பாடல் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவிற்கு திரையுலகத்தினர் பலர் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், களத்தூர் கமலை மக்களுக்குக்கொண்டு சேர்த்தது அம்மாவும் நீயே என்ற பாடல் தான். அதைப்பாடிய அம்மையார் எம்.எஸ்.ராஜேஸ்வரி நம்மை விட்டு அகன்றார். அவர் ரசிகர்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்.