திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 13 ஜூலை 2018 (12:49 IST)

கடைக்குட்டி சிங்கம்: திரைவிமர்சனம்

கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தின் வெற்றியை அடுத்து பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள திரைப்படம் 'கடைக்குட்டி சிங்கம்'. முதல்முறையாக கார்த்தியுடன் இணைந்துள்ள இயக்குனர் பாண்டிராஜ், மீண்டும் ஒருமுறை சூர்யா தயாரிக்கும் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
 
சத்யராஜுக்கு இரண்டு மனைவிகள். இரண்டு மனைவிகள் மூலம் ஐந்து பெண் குழந்தை இருந்தாலும் ஒரு ஆண் குழந்தை இல்லை என்ற ஏக்கம் அவரை வாட்டி வதைக்கின்றது. இதனை அடுத்து பிறக்கும் ஆண் குழந்தையை செல்லமாக வளர்க்கின்றார். அவர்தான் கார்த்தி. ஐந்து அக்கா, அவர்களுடைய கணவர்கள், முறைப்பெண் மற்றும் விவசாயம் என நிம்மதியாக போய்க்கொண்டிருக்கும் கார்த்திக்கு தற்செயலாக சந்திக்கும் சாயிஷா மீது காதல் வருகிறது. ஆனால் சாயிஷாவை திருமணம் செய்ய ஐந்து அக்காள்களும் சம்மதிக்கவில்லை. எல்லோரும் சம்மத்தித்தால் தான் இந்த திருமணத்திற்கு தான் ஒப்புக்கொள்வேன் என்று சத்யராஜ் கூறுகிறார். இதனையடுத்து ஐந்து அக்காவின் சம்மதத்தோடு கார்த்தி, சாயிஷாவை கரம்பிடித்தாரா? என்பதுதான் மீதிக்கதை
 
ஆரம்ப காட்சியிலேயே ரேக்ளா ரேஸ் போட்டியில் அசத்தும் கார்த்தி அதன் பின்னர் சூரியுடன் காமெடி, முறைப்பெண்களுடன் குறும்பு , வில்லனிடம் மோதல், சாயிஷாவுடன் காதல் என ஜாலியாக நடித்துள்ளார். இரண்டாம் பாதியில் தனது திருமணத்தால் குடும்பத்தில் பிரச்சனை, அக்காக்கள் கோபித்து கொண்டு செல்வது என கதை விறுவிறுப்பாக செல்லும் வகையில் கார்த்தியின் நடிப்பிலும் மெச்சூரிட்டி தெரிகிறது
 
கிராமத்து பெண் கேரக்டருக்கு சாயிஷா சுத்தமாக பொருந்தவில்லை. என்னதான் பாவாடை தாவணி காஸ்ட்யூமில் வந்தாலும் அவர் இந்த கேரக்டருக்கு செட் ஆகவில்லை. முறைப்பெண்களாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர் மற்றும், அர்த்தனா பினு ஆகியோர் நடிப்பு சூப்பர்.
 
சத்யராஜ் தனது வயதுக்கேற்ற கேரக்டரை ஏற்று பொருத்தமான நடிப்பை தந்துள்ளார். அவருடைய மனைவிகளாக நடித்திருக்கும் விஜிசந்திரசேகர், பானுப்பிரியா இருவருடை நடிப்பும் அருமை. குறிப்பாக கிளைமாக்ஸில் விஜி பொரிந்து தள்ளியுள்ளார்.
 
சூரியின் காமெடி ஆங்காங்கே சிரிப்பை வரவழைத்தாலும் அவரிடம் நாங்கள் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கின்றோம்,. மேலும் பொன்வண்ணன், இளவரசு, சரவணன், ஸ்ரீமான் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கேரக்டரில் கச்சிதமாக நடித்துள்ளனர்.
 
ஒரே படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்தை இணைத்தது மட்டுமின்றி அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் இயக்குனர் பாண்டிராஜனின் திரைக்கதை வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அதே நேரத்தில் முதல் பாதி மெதுவாக நகர்வதோடு பழைய படங்களின் சாயல் அதிகமாக உள்ளது. உப்புசப்பில்லாத வில்லன் இந்த படத்திற்கு தேவைதானா? என்று எண்ண தோன்றுகிறது. மேலும் கிளைமாக்ஸ் கோவில் காட்சி வேற லெவல். இதுபோன்ற ஒரு உணர்ச்சிமிக்க கிளைமாக்ஸ் பார்த்து பல வருடங்கள் ஆகிறது.
 
டி.இமானின் இசையில் மூன்று பாடல்கள் சூப்பர். பின்னணி இசை கதையோட்டத்திற்கு பெரிதும் உதவுகிறது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் கேமிரா மாயாஜாலம் செய்துள்ளது. குறிப்பாக 'உழவன் மகன்' ரேக்ளா ரேஸ் போட்டிக்கு இணையான ஒரு ரேக்ளா ரேஸ் போட்டியை படம்பிடித்தது அற்புதம். 
 
மொத்ததில் சிறுசிறு குறைகள் இருந்தாலும் நிறைகள் அதிகம் உள்ள குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஒரு தரமான படம்தான் 'கடைக்குட்டி சிங்கம்'
 
ரேட்டிங்: 3.5/5