டீச்சர் அவதாரம் எடுக்கும் ஜோதிகா - அடுத்த வாரம் படப்பிடிப்பு ஆரம்பம்
நடிகை ஜோதிகா அடுத்த படத்தில் டீச்சராக நடிக்க உள்ளார்.
தமிழ் சினிமா உலகை பொருத்தவரை டீச்சர் கதாபாத்திரம் என்றாலே அதற்கு தனி மவுசு உண்டு.
பாரதிராஜாவின் இயக்கத்தில் படங்களில் வந்த குடைபிடிக்கும் டீச்சரிலிருந்து, நாட்டாமை டீச்சர், குற்றம் கடிதல் படத்தில் வந்த கண்டிப்பான டீச்சர் என சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்த வகையில் நடிகை ஜோதிகாவும் கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் 2003 ம் வருடம் வெளிவந்த காக்க காக்க படத்தில், சாந்தமான டீச்சர் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். அந்த சேலைக்கட்டும், கவர்ந்திழுக்கும் லுக்கும், நிதானமான நடிப்பும் அப்படியே அள்ளிக் கொண்டு போனது.
இந்நிலையில் தற்போது மீண்டும் நடிகை ஜோதிகா டீச்சர் அவதாரம் எடுக்க உள்ளார்.
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ள நிலையில், அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ராஜ் இயக்க உள்ளார். இத்திரைப்படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டது. அதில் சிவகுமார், சூர்யா, எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இப்படத்தில் ஜோதிகா பள்ளி ஆசிரியையாக நடிக்க உள்ளாராம். அதற்காக சென்னையில் ஒரு பள்ளியின் செட் போடப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரமே படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.