ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 ஜூன் 2023 (20:48 IST)

ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் வழங்கியது பற்றி கமல்ஹாசனுக்கு பிரபல எழுத்தாளர் கேள்வி

Pattukkottai Prabakar
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஷர்மிளா சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு இன்று நடிகர் கமல்ஹாசன் கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார்.

இந்த நிலையில்,   பிரபல எழுத்தாளரும், திரைப்பட வசன கர்த்தாவுமான பட்டுக்கோட்டை பிரபாகர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த சம்பவம் தொடர்பாக   நடிகர் கமல்ஹாசனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில், ‘’பணிக்குச் செல்லும் ஒரு பெண்ணை கார் கொடுத்து தொழில் முனைவோராக்கிய கமலுக்கு நன்றி. பெண் முன்னேற்றம் தொடர்பான எந்தச் செயலும் பாராட்டுக்குரிய செயல்தான்.

கூடவே சில கேள்விகளும்..

இதற்கு பல காலம் முன்பே கனரக வாகனம் ஓட்டிய பெண்கள் இருக்கிறார்களே..
இவர் சமீபத்து ஊடகப் பிரபலம் என்பதாலா? தலைக்கு மேல் வெளிச்சம் படாத அல்லது வெளிச்சம் போட்டுக்கொள்ளத் தெரியாத அந்த சாதனைப் பெண்களில் இருந்து எந்த வகையில் இவரின் சாதனை தனித்துவம் கொண்டது?

பேருந்தில் ஏறியிருப்பது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், அதிலும் ஆளும் கட்சியின் செல்வாக்கு மிக்க ஆளுமை என்றபோதும், தன் கடமை தவறாமல் பயணச் சீட்டு வாங்கச் சொன்ன பேருந்தின் நடத்துனர் பெண்மணி செய்ததில் துணிச்சலும், நேர்மையும் தெரியவில்லையா?

அவருக்கு அட்லீஸ்ட் ஒரு ஸ்கூட்டராவது கொடுத்திருக்கக் கூடாதா கமல் சார்?

அந்தத் தனியார் பேருந்தின் உரிமையாளர் பேட்டியைப் பார்த்தீர்களா? வேலையை விட்டு அவர் நிறுத்தவில்லை. அவர் மறுபடி பணிக்கு வந்தாலும் தாராளமாக வரட்டும் என்கிறார்.
தன் வாகனத்திற்கும், பயணிகளுக்கும் பாதிப்பு வந்துவிட்டாலும் பரவாயில்லை என்று பெண்களுக்கு சிரமமான இந்தப் பணிகளில் வாய்ப்பு கொடுக்க முன்வந்த அந்த முதலாளி கடைசியில் ஊடகங்களில்  வில்லன் போல சித்தரிக்கப்பட்டது சரியா சார்?’’என்று தெரிவித்துள்ளார்.