வித்தியாசமான தலைப்போடு களமிறங்கும் சேரன் !
நடிகர் மற்றும் இயக்குனருமான சேரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
பொற்காலம், பாரதி கண்ணம்மா, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து போன்ற தன் படங்களால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நல்விருந்து படைத்தவர் இயக்குனர் சேரன். ஆட்டோகிராஃப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தொடந்து சிலப் படங்களில் நடிக்கவும் செய்தார்.
ஆனால் கடைசியாக அவர் இயக்கிய மாயக்கண்ணாடி, ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை ஆகியப் படங்களின் வியாபார ரீதியான தோல்வியாலும், சி2எச் மற்றும் தனது மகளின் காதல் சர்ச்சைகள் போன்ற தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாகவும் சிறிது காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.
தற்போது 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தனது புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். திருமணம் சில திருத்தங்களுடன் என வித்தியாசமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டுள்ளார்.