கேப்டன் மில்லர் என்னுடைய கதை..! நடிகர், எழுத்தாளர் வேல ராமமூர்த்தி குற்றச்சாட்டு!
தனுஷ் நடித்து வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் தனது நாவலிலிருந்து எடுக்கப்பட்டதாக நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி குற்றம் சாட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாரான படம் கேப்டன் மில்லர். பொங்கலையொட்டி ஜனவரி 10ல் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சுமாரான வரவேற்பையே பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் கதை தனது நாவலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார் பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி.
வேல ராமமூர்த்தி அவர் எழுதிய குற்ற பரம்பரை, குருதி ஆட்டம், அரியநாச்சி உள்ளிட்ட பல நாவல்களுக்காகவும் புகழ்பெற்றவர். மேலும் மதயானை கூட்டம், கிடாரி, அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களிலும், எதிர்நீச்சல் டிவி தொடரில் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார்.
இவர் எழுதிய பட்டத்து யானை என்ற நாவல் டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தார் மூலம் புத்தகமாக வெளியாகியிருந்தது. தற்போது இந்த பட்டத்து யானையின் கதையை எடுத்துதான் கேப்டன் மில்லர் படத்தை எடுத்திருப்பதாக வேல ராமமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.
சமீப காலமாக இதுபோல எழுத்தாளர்களின் புத்தகங்களை அவர்கள் அனுமதி இன்றி எடுத்து படமாக செய்வது தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவது தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K