புஷ்பா 2 பார்க்க சென்று இறந்த பெண் குடும்பத்துக்கு 25 லட்சம் நிதியுதவி… அல்லு அர்ஜுன் அறிவிப்பு!
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த வியாழக்கிழமை ரிலீஸான படம் புஷ்பா 2. இந்த படத்தின் முதல் பாகம் பெரும் ஹிட் அடித்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. முதல் நாளில் மட்டும் 294 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து இந்திய சினிமாவிலேயே எந்தவொரு படமும் படைக்காத சாதனையைப் படைத்துள்ளது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி படம் பார்க்க பெண் ஒருவர் தனது 9 வயது மகனுடன் சென்றுள்ளார். அந்த சமயம் திரையரங்கிற்கு அல்லு அர்ஜுன் வருவதாக தகவல் வெளியானதும் கூட்ட நெரிசல் அதிகரித்தது. இதில் சிக்கி பெண் பரிதாபமாக பலியான நிலையில், 9 வயது மகன் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு தன் சார்பாக 25 லட்ச ரூபாய் நிதியுதவி அளிப்பதாகவும் தங்கள் குழு சார்பாக எந்த விதமான உதவி வேண்டுமானால் செய்ய தயாராக இருப்பதாகவும் அல்லு அர்ஜுன் கூறியுள்ளார்.