புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 23 மார்ச் 2020 (08:05 IST)

நடிகர் விசு மரணம்: திரை உலகினர் அஞ்சலி!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவரான விசு நேற்று உடல்நல குறைவால் காலமானார்.

தமிழ் சினிமாவில் 1982ல் கண்மனி பூங்கா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விசு என்கிற விஸ்வநாதன். குடும்ப பாங்கான கதைகளில் நகைச்சுவையையும், குடும்ப சிக்கல்களையும் கலந்து இவர் உருவாக்கிய படங்கள் தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. குடும்ப சிக்கல்களை மையப்படுத்தி இவர் உருவாக்கிய ‘சம்சாரம் அது மின்சாரம்’ இன்றளவும் அவரது மாஸ்டர் பீஸாக கருதப்படுகிறது.

அந்த படத்தின் மூலம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றார் விசு. தொடர்ந்து மணல் கயிறு, டவுரி கல்யாணம், திருமதி ஒரு வெகுமதி என பல படங்களை இயக்கிய விசு பல படங்களில் நடிக்கவும் செய்தார். நகைச்சுவை, குணசித்திர பாத்திரங்களில் கவனம் கொள்ள கூடிய நடிப்பை தந்தவர் கடைசி காலங்களில் தனியார் தொலைக்காட்சியின் பட்டிமன்ற நிகழ்ச்சி தொகுப்பாளராக பிரபலமாக இருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவால் பெரும்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விசு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணம் அடைந்தார்.

அவரது குடும்பத்திற்கு மு.க. ஸ்டாலின், ஜி.கே.வாசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தங்கள் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.