ரஜினி, முருகதாஸ் படத்தின் பெயர் நாற்காலி இல்லை – திடீர் அறிவிப்பு
ரஜினி நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் நாற்காலி இல்லை என ஏ ஆர் முருகதாஸ் அறிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தற்குப் பிறகு அரசியல் பணிகளில் ஈடுபடுகிறாரோ இல்லையோ வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். பேட்ட படம் ரிலிஸான உடனேயே முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார்.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தினைப் பற்றி தினமொரு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இப்படத்தின் இயக்குனர் முருகதாஸ், ஹீரோ ரஜினி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் என்பதைத் தவிர வேறு எந்தவொரு விஷயமும் இன்னும் உறுதியாகவில்லை.
ஆனால் சமூக வலைதளங்களில் இந்தப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்றும் இப்படத்தின் தலைப்பு நாற்காலி என்றும் செய்திகள் உலாவர ஆரம்பித்துள்ளன. சில தினங்களுக்கு முன்பு நாற்காலி என்ற பெயரில் ரஜினி நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போன்ற போஸ்டர் ஒன்றும் வெளியாகிப் பரபரப்பைக் கூட்டியது.
இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இப்படத்தின் டைட்டில் நாற்காலி இல்லை என தனது முகநூலில் தெரிவித்திருக்கிறார்.