சர்காருக்கு சந்தோஷம் ; ’பேட்ட’ க்கு வருத்தமா ? – சன்பிக்சர்ஸுக்கு கேள்வி
தமிழ்நாட்டு தியேட்டர்களில் பேட்ட மற்றும் விஸ்வாசம் பட்ங்களின் வசூல் நிலவரங்களை வெளியிட்ட ஆன்லைன் டிராக்கர்ஸ்களை சன் பிக்சர்ஸ் கடுமையாக விமர்சித்து உள்ளது.
பேட்ட, விஸ்வாசம் என இரண்டுப் படங்களும் அந்தந்த படங்களின் ரசிகர்களையே இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. பேட்ட படம் ரஜினியின் இளமையான தோற்றத்துக்காகவும் விஸ்வாசம் படம் அஜித்தின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மற்றும் குடும்ப செண்ட்டிமெண்ட் காரணமாகவும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
தியேட்டர்களை இரண்டுப் படங்களும் கிட்டதட்ட சம அளவில் பகிர்ந்து கொண்டாலும் தமிழக வசூலில் விஸ்வாசம் முன்னிலையிலும் உலக அளவிலான வசூலில் பேட்ட முன்னிலையிலும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்ட அதிகாரப் பூர்வமானத் தகவல்கள் இல்லை. ஆன்லைன் டிராக்க்ர்ஸ் வெளியிட்ட தோராயமான மதிப்பே ஆகும்.
ஆனால் இந்த புள்ளிவிவரங்கள் விஸ்வாசம் படத்திற்கு சாதகமாக இருப்பதைக் கண்டு சன்பிக்சர்ஸ் நிறுவனம் கொதித்தெழுந்துள்ளது. ஆன்லைன் டிராக்கர்ஸுக்குப் பதிலளிக்கும் விதமாக ‘பாக்ஸ் ஆஃபீஸை ட்ராக் செய்யும் அன்பர்களே, நீங்கள் எப்படி இவ்வளவு உறுதியாக பேட்ட படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் எண்களைக் கூறுகிறீர்கள் என்பது எங்களுக்குப் புரியவில்லை. ஏனெனில் தமிழகம் முழுவதும் பேட்ட ரிலிசான தியேட்டர்களில் இருந்து எங்களுக்கே அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை. ரசிகர்களே தவறான சித்தரிப்புகளுக்கு இரையாகிவிடாதீர்கள்’ எனத் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக இணைய விமர்சகர்கள் தரப்பில் இருந்து ‘ இதேப்போல சர்கார் படத்தின் போது நாங்கள் அறிவித்த புள்ளிவிவரங்களை நீங்கள் டிவிட் செய்து உங்கள் வியாபாரத்திற்குப் பயன்படுத்திக் கொண்டீர்களே.. அப்போது மட்டும் எங்கள் புள்ளி விவரம் உண்மையாக இருந்தது இப்போது பொய்யாகிவிட்டதா ?’ எனக் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதனால் சன்பிக்சர்ஸுக்கும் ஆன்லைன் டிராக்கர்ஸுக்கும் இடையில் மோதல் போக்கு உருவாகியுள்ளது.