ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அ‌றிவோ‌ம்
Written By
Last Modified: திங்கள், 27 மே 2019 (15:46 IST)

பெண்களை விட ஆண்களே அதிகம் புரளி பேசுகிறார்கள் - கலகலக்கும் சர்வே

புரளி பேசுவது மனிதன் எப்போது வாய் பேச ஆரம்பித்தானோ அப்போதிருந்தே தொடங்கியிருக்க வேண்டும். பொதுவாக பெண்கள் அடிக்கடி கூடி பேசி கொள்வதை பார்க்கும் பல ஆண்கள் “ஏன்தான் பெண்கள் எப்போதும் இப்படி புரளி பேசுகிறார்களோ?” என புலம்புவது உண்டு. நம் கிராமங்களில் கூட பொழுதுபோனால் கிழவிகள் கூடி பேசும் புரளி கதைகளை கேட்டு நாம் வளர்ந்திருப்போம். அதனால்தான் அதிகமாய் வாய்பேசும் குழந்தைகளை “கிழவி மாதிரி பேசறா பாரு” என்பார்கள். ஆனால் இனிமேல் “கிழவன் மாதிரி பேசறா பாரு” என்றுதான் கூற வேண்டியிருக்கும்.
ஆமாம். பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் புரளி பேசுகிறார்கள் என்று சமீபத்தைய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆண்களும் சரி, பெண்களும் சரி புரளி பேசாமல் இருக்க போவதில்லை. அதில் யார் எந்த புரளி கதையை அதிகம் பேசுகிறார்கள் என ஒப்பிட்டு பார்க்கவே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 
ஆண்களில் சராசரியாக ஐந்து பேரில் ஒருவர் ஒரு நாளைக்கு புரளி பேச மட்டும் சுமாராக 3 மணி நேரம் வரை எடுத்து கொள்கிறார். அதுவும் வேலை நேரத்தில் பெண் தோழிகள் பற்றி பேசுவது மற்றும் பதவி உயர்வில் தனக்கு எதிராக இருப்பவர் பற்றி பேசுவது என்றால் இவர்களுக்கு அலாதியான பிரியமாம்.
 
பத்து பேரில் ஒரு ஆண் ஒரு குறிப்பிட்ட நபரை பற்றி ரொம்ப கேவலமாக பேசுவது, அவரை பற்றி தவறான விஷயங்களை பரப்புவது போன்றவற்றில் ஆர்வம் காட்டுவாராம். இதில் பெண்களோடு ஒப்பிடும்போது ஆண்கள் கம்மிதான். ஒரு நபரை பற்றி இல்லாத விஷயங்களை கதைக்கட்ட ஆண்கள் ரொம்ப யோசிப்பார்களாம். 
வேலை நேரத்தில் சாதரணமாகவே புரளி பேசும் ஆண்கள் 55 சதவீதம். ஆனால் இதில் பெண்கள் 46 சதவீதம்தான். அந்த 46 சதவீத பெண்களும் பெரும்பாலும் குடும்ப பிரச்சினை, சீரியல் கதைகள், பழைய தோழிகள் பற்றிய கதைகள், அழகு குறிப்புகள், பக்கத்து வீட்டுக்காரரகளோடு நேற்றிரவு நடந்த சண்டை ஆகியவற்றைதான் அதிகம் பேசுவார்களாம்.
அதேபோல ஆண்களின் விருப்பமான தலைப்புகள் பழைய பள்ளி நண்பர்கள், அலுவலகத்தில் இருக்கும் கவர்ச்சியான பெண் பணியாளர், சம்பள உயர்வு, அப்புறம் கடைசியாக நெருங்கிய நண்பனின் வெற்றி கதைகள்.
 
சரி அலுவலகத்தில்தான் இப்படி இருக்கிறதே வீட்டிற்கு வந்தால் நண்பர்களிடம் என்ன பேசுவார்கள் என்றால் 17 சதவீத ஆண்கள் இரவு நேரங்களில் காம கதைகள் அதிகம் பேசுவார்களாம், 10 சதவீத பெண்களும் இதே பதிலை சொல்லியிருக்கிறார்கள். அதிலும் பெரும்பாலான பெண்கள் தங்கள் தோழிகளுக்கு கணவன்மார்களை எப்படியெல்லாம் வசியப்படுத்தலாம் என்பதை சொல்லிக்கொடுப்பதில்தான் நேரத்தை அதிகம் செலவு செய்கிறார்களாம்.
 
இந்த ஆராய்ச்சியில் உலகெங்கிலும் உள்ள 1033 பேர் கலந்து கொண்டிருந்திருக்கிறார்கள். இந்த ஆய்வை நடத்திய டேவிட் சேல்ஸ் என்பவர் “பெண்கள் மட்டும்தான் புரளி பேசுவார்கள் என்று இங்கே ரொம்ப காலமாய் சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஆண்கள்தான் புரளிக்கு பெண்களை விட முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.