புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 22 டிசம்பர் 2021 (16:10 IST)

பார்த்தான்.. புடிச்சது.. ரிப்பீட்டு.. பார்த்தான்.. புரியல.. ரிப்பீட்டு - மாநாடு பட வெற்றி சூட்சுமம்!

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவ-25ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
 
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், டேனி, அஞ்சனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 25வது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. 
 
இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவரும் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
 
இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசும்போது, “இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்னவென்றால் பார்த்தான்.. புடிச்சது.. ரிப்பீட்டு.. பார்த்தான்.. புரியல.. ரிப்பீட்டு என்று சொல்லலாம்.. பிடித்தவர்கள் திரும்ப திரும்பப் பார்த்தார்கள்.. முதல் தடவை படம் பார்த்து புரியாதவர்கள் இரண்டாம் முறை அது என்ன என்று புரிந்து கொள்வதற்காக திரும்பவும் பார்த்தார்கள்.. அதுதான் இந்த படத்தின் மிகப்பெரிய காரணமாக அமைந்தது..
 
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தாக்கம் உள்ளிட்ட பல பிரச்சனைகளால் நலிவடைந்து கிடந்த விநியோகஸ்தர்கள் இந்த படத்தை வாங்கியதால் மீண்டும் உயிர் பெற்று இதன்மூலம் சம்பாதித்திருக்கிறார்கள் என்றால் அதுதான் மாநாடு படத்தின் உண்மையான வெற்றி.. தயாரிப்பாளர் சங்கிலி முருகனுக்கு அடுத்து சரியான திட்டமிடலுடன் கண்டிப்புடனும் ஒரு படத்தை தயாரிக்கிறார் என்றால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியைத்தான் நான் சொல்வேன்.. 
 
அதேபோல இயக்குனர் வெங்கட்பிரபு 80 நாட்களில் இந்த படத்தை எடுத்து தருவதாக கூறி, 68 நாட்களிலேயே படப்பிடிப்பை முடித்து தயாரிப்பாளருக்கு பக்கபலமாக இருந்துள்ளார்.. அதுமட்டுமல்ல இந்த கோவிட் காலகட்டத்தில் தயாரிப்பாளரின் சுமையை குறைக்கும் விதமாக தனது சம்பளத்தில் 30 சதவீதத்தையும் விட்டுக் கொடுத்துள்ளார்” என்றார்.