சத்யன் நல்ல நகைச்சுவை நடிகர் என்பது தெரியும். நண்பன் படம் சத்யன் அதற்கும் மேல என்பதை உணர்த்தியது. ஆனால், அதன் பிறகு அதேபோலொரு வேடம் அவருக்கு அமையவில்லை. படங்களில் அவரைப் பார்ப்பதும் குறைந்து வருகிறது. ஏன்...? அவரே சொல்கிறார்...
நீங்கள் நடித்ததில் உங்களுக்குப் பிடித்த படம்...?
எனக்கு மட்டுமில்லை, என்னுடைய மனைவிக்கும் பிடித்த படம், நண்பன்.
அதேபோன்ற படங்கள் பிறகு அமையவில்லையே?
அதனால்தான் அது இன்னும் எனக்குப் பிடித்த படமாக இருக்கிறது. ஆனாலும், துப்பாக்கி போன்ற படங்களில் எனக்கு நல்ல வேடம் கிடைத்தது.
உங்களை இப்போதெல்லாம் அதிகமாக படங்களில் பார்க்க முடியவதில்லையே?
நான் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பெரிய படங்களாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்.
ஏன் இப்படியொரு திடீர் நிலைப்பாடு...?
சமீபகாலமாக சிறிய படங்களில் நடித்தால் அதில் பல படங்கள் திரைக்கே வருவது இல்லை. இதனால் எனது உழைப்பு வீணாகி விடுகிறது. எனவே தான் சிறிய படங்களை நான் ஏற்க இயலவில்லை.
அதாவது நிறைய சின்ன படங்களில் நடித்திருக்கிறீர்கள்...?
ஆமா. அகராதி, இருவர் உள்ளம், களவாடிய பொழுதுகள், மச்சான், காவியன்...
இப்போது என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும், தானா சேர்ந்த கூட்டம் படத்திலும், விஜய்யின் 61 -வது படத்திலும் நடிக்கிறேன்.
சூர்யா படத்தில் என்ன மாதிரியான வேடம்?
முழுக்க முழுக்க சூர்யாவுடன் வரும் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறேன்.
விஜய் படத்தில்...?
விஜய்யின் நண்பனாக நடிக்கிறேன்.
வேறு படங்கள்...?
இப்போதைக்கு விஜய், சூர்யா படங்களில் மட்டும்தான் நடித்து வருகிறேன். இது போன்ற பெரிய நடிகர்கள், பெரிய டைரக்டர்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.