உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: படங்களுடன் முழுவிவரம்!

வீரமணி பன்னீர்செல்வம்| Last Updated: திங்கள், 14 ஜூலை 2014 (15:56 IST)
பிரேசில், ரியோ-டி-ஜெனிரோ நகரத்தில் உள்ள மரக்காணா மைதானத்தில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் ஜெர்மனி - அர்ஜெண்டீனா அணிகளுக்கு இடையேயான போட்டியில் கூடுதல் நேரத்தில் ஜெர்மனி யாரும் எதிர்பாராத வகையில் ஒரு கோல் அடித்து உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
ஆட்டம் தொடங்கிய நிமிடத்திலிருந்து இரு அணியின் ஆட்டங்களும் மிகவும் ஆக்ரோசமாக இருந்தது. இரு அணிகளுமே கால்பந்துக்கே உரிய நுணுக்கங்களைப் பற்றி கவலைப்படாமல் தங்களுடைய நாட்டின் கவுரவத்தை காக்கப் போராடுகிறோம் என்ற உணர்ச்சி நிலையில் விளையாடியது போலவே தோன்றியது.
 
ஒட்டுமொத்த ஆட்டத்திலும் 63 சதவீதம் பந்து ஜெர்மனி வீரர்களின் வசமே இருந்தது. அர்ஜெண்டீனா வீரர்களால் 37 சதவீதமே பந்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது. இதில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். என்னதான் ஜெர்மனி பந்தை ஆக்கிரமித்திருந்தாலும், அர்ஜெண்டீனா வீரர்களின் அபாரமான தடுப்பாட்டத் திறமையால்தான் ஜெர்மனி இறுதிவரை கோல் அடிக்க திணறியது. இந்த இடத்தில்தான் பிரேசில் வீரர்கள் கோட்டைவிட்டார்கள் என்பது அர்ஜெண்டீனாவின் தடுப்பாட்டத்தை கவனித்த அனைவர் மனதிலும் தோன்றியிருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. ஜெர்மனி வீரர்களிடம் கவனித்த மற்றொரு மெச்சத்தகுந்த அம்சம் அவர்கள் ஒரு அணியாக நின்று விளையாடினர். யாருக்கும் சுயமாக தான் யார் என்று காட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. காரணம் அவர்கள் பாஸ் செய்து ஆடிய விதம். ஜெர்மனியின் ஒவ்வொரு பாஸும் அவ்வளவு அழகாக, மிக ஒற்றுமையாக இருந்தது.
 
ஜெர்மனி வீரர்கள் 10 முறையும், அர்ஜெண்டீனா வீரர்கள் 9 முறை கோல் முயற்சி செய்தனர். ஜெர்மனி வீரர்கள் 5 முறையும், அர்ஜெண்டீனா வீரர்கள் 3 முறையும் கார்னர் கிக் வாய்ப்புகளை பயன்படுத்தினர். ஜெர்மனி வீரர்கள் 20 முறையும், அர்ஜெண்டீனா வீரர்கள் 13 முறையும் ஃபவுல் செய்தனர். ஜெர்மனி வீரர்கள் 3 முறையும், அர்ஜெண்டீனா வீரர்கள் 2 முறையும் ஆஃப் சைடு வாங்கினர். இதில் அர்ஜெண்டீனாவுக்கு ஒரு கோல் வாய்ப்பே பறிபோனது.


இதில் மேலும் படிக்கவும் :