1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (18:31 IST)

நர்சிங் யாதவை விளையாட அனுமதிக்கலாம் : ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் அதிரடி

ஊக்க மருந்து அருந்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட மல்யுத்த வீரர் நர்சிங் யாதவை ஒலிம்பிக்கில் விளையாட அனுமதிக்கலாம் என தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


 

 
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 50-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் ஆண்கள் 74 கிலோ எடைபிரிவு மல்யுத்த போட்டியில் பங்கேற்க இந்திய வீரர் நர்சிங் யாதவ் தகுதி பெற்றிருந்தார். இந்த நிலையில், தேசிய ஊக்கமருந்து தடுப்புக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில், அவர் தடை செய்யப்பட்ட ஸ்டீராய்டு மருந்து உட்கொண்டது தெரியவந்தது.
 
அவரிடம் இருந்து மீண்டும் பெறப்பட்ட ‘பி’ மாதிரியின் பரிசோதனை முடிவும் அதை உறுதி செய்தது. இதனால் ரியோ ஒலிம்பிக்கில் நர்சிங் யாதவ் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது.
 
‘நான் எந்த தவறும் செய்யவில்லை. என்னை சிக்கவைப்பதற்காக யாரோ செய்த சதி இது. தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை ஒருபோதும் உட்கொண்டது கிடையாது. இந்த பிரச்னையில் இந்திய ஒலிம்பிக் சங்கம் எனக்கு ஆதரவாக இருக்கும் என நம்புகிறேன்’ என்று நர்சிங் யாதவ் கூறியிருந்தார்.
 
அவருக்கு பதிலாக பர்வீன் ரணாவின்பெயரையும் அறிவித்திருந்தது இந்திய மல்யுத்த சம்மேளனம். அதற்கு சரவதேச மல்யுத்த சம்மேளனமும் ஒப்புதல் அளித்தது. நர்சிங் யாதவிடம் ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் மூன்றரை மணிநேரம் விசாரணை நடத்தி இன்று தீர்ப்பு வழங்கியது.
 
அதில், நர்சிங்யாதவ் மீது எந்த தவறும் இல்லை. அவர் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை. தேசிய விளையாட்டு ஆணையம் வழங்கிய உணவில் ஊக்கமருந்து இருந்தது. ஊக்கமருந்து கலந்தது தெரியாமலே அவர் உணவு உட்கொண்டுள்ளார். எனவே நர்சிங் யாதவை ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கலாம் என்று தீர்ப்பு கூறியுள்ளது. 
 
இதன்மூலம், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க நர்சிங் யாதவிற்கு அனுமதி கிடைத்துள்ளது.