ஒரே பந்தில் இந்தியாவின் வெற்றியும் விராத் கோஹ்லியின் சதமும்.. பாகிஸ்தான் படுதோல்வி..!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் விராட் கோலியின் சதமும், இந்தியாவின் வெற்றியும் ஒரே பந்தியில் நிகழ்ந்தது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று அனைவரும் எதிர்பார்த்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. துபாயில் நடந்த இந்த போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ஆனால், அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொதப்பினர். இறுதியில், 49.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 241 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனை தொடர்ந்து, 242 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வந்த ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் சுமாரான தொடக்கத்தை கொடுத்த நிலையில் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடினர்.
42.2 ஓவரில், விராத் 96 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தார். அடுத்த பந்தில், அவர் ஒரு பவுண்டரி அடித்து சதமடித்ததோடு, இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம், இந்தியாவின் வெற்றியும் விராட் கோலியின் சதமும் ஒரே பந்தில் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி ஏ பிரிவில் முதல் இடத்திலும், நியூசிலாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் இன்னும் ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை. இரண்டு போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்ததால், பாகிஸ்தான் அணி இந்த தொடரில் இருந்து அடுத்த சுற்றுக்கு செல்ல முடியாத நிலைமையில் உள்ளது.
Edited by Siva