கமலுக்கு ரஜினி தந்த பரிசு
கமல் திரையுலகுக்கு வந்து 50 வருடங்கள் ஆனதை பிரமாண்டமாக கொண்டாடியது நினைவிருக்கலாம். ரஜினி, மம்முட்டி, மோகன்லால் என பலரும் இதில் கலந்து கொண்டனர். ரஜினி பேசும் போது, கலைத்தாய் கமலை மட்டும் தனது இடுப்பில் தூக்கி வைத்திருக்கிறாள் என்று அதற்கு விளக்கமும் கூறினார்.
சமீபத்தில், கலைத்தாயின் இடுப்பில் கமல் இருப்பது போலவும், ரஜினி, மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்கள் கலைத்தாயுடன் நடந்து வருவது போலவும் ஒரு ஓவியம் வரையச் செய்து அதனை கமலுக்கு பரிசளித்தார் ரஜினி. ரஜினியின் இந்த அன்பைக் கண்டு நெகிழ்ந்து போன கமல், தொலைபேசியில் அவருக்கு நன்றி தெரிவித்தார். இப்போது அந்தப் படம் கமலின் ஆழ்வார்பேட்டை வீட்டில் உள்ளது.
நயன்தாராவின் திருமணத்தை நடத்தி வைப்பேன்
உணர்ச்சிவசப்பட்டு பேசுவதில் அப்பாவுக்கு தப்பாத பிள்ளை சிம்பு. வாலு படம் நன்றாகப் போகும் உற்சாகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நயன்தாரா பற்றியும் கேட்கப்பட்டது. அதற்காகவே காத்திருந்தது போல் பேச ஆரம்பித்தார்.
"நயன்தாராவை நான் பிரிந்தது பற்றி கேட்கிறார்கள். நயன்தாராவை விட்டு நான் பிரிந்த பிறகு மீண்டும் அவருடன் இணைந்து ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடிக்கிறீர்களே என்றும் கேட்கிறார்கள்.
காதலில் நான் நிறைய அடிபட்டு விட்டேன். நயன்தாராவும், நானும் எதிர்மறையான சிந்தனையோடு பிரியவில்லை. ஒரு சூழ்நிலை காரணமாக சேர்ந்து இருக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. எனவே பிரிந்துவிட்டோம். கோபித்துக்கொண்டு விலகவில்லை. அதனால் தான் மீண்டும் சேர்ந்து நடிக்கிறோம்.
டைரக்டர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிக்கிறார்களா என்று கேட்கிறீர்கள். அவர்கள் காதலிப்பதாக இதுவரை சொல்லவில்லை. இதேபோல் தான் பிரபுதேவாவை நயன்தாரா காதலிக்கிறாரே என்று கேட்டார்கள். நான் நடக்கும்போது கேளுங்கள் என்று பதிலளித்தேன். அது நடந்ததா?. நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் எனக்கு நண்பர்கள். அவர்கள் காதலித்தால் சந்தோஷம் தான். அவர்களுடைய திருமணத்தையும் நானே நடத்தி வைப்பேன்" என்றார்.
விட்டால் கல்யாணத்தை முடித்து தேனிலவுக்கும் அனுப்பி வைப்பார் போலிருக்கே.
பாட்ஷா 2 கனவை மூட்டை கட்டிய சுரேஷ் கிருஷ்ணா
பாட்ஷா, அண்ணாமலை என்று மெகாஹிட் கொடுத்த சுரேஷ் கிருஷ்ணாவுக்கு இப்போது தொலைக்காட்சியில்தான் இடம் கிடைத்திருக்கிறது. மீண்டும் பழைய வசந்தத்தை மீட்டெடுக்க அவர் நம்பியது, பாட்ஷா இரண்டாவது பாகம்.
ரஜினியை மனதில் வைத்து பாட்ஷா இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி ரஜினியிடம் கூறினார். கதையை கேட்ட ரஜினி, வேண்டாமே இந்த விஷப்பரீட்சை என்று கைவிரித்தார். ரஜினி இல்லையென்றால் அஜித்தை வைத்து இரண்டாம் பாகத்தை தொடங்கலாம் என அஜித்தின் கால்ஷீட்டை பெற முயன்றார். அஜித்தும் முடியாது என்றால் ஜெயம் ரவி, பரத் என்று போகவும் சுரேஷ் கிருஷ்ணா தயார்.
இந்நிலையில் ரஜினியிடமிருந்து சுரேஷ் கிருஷ்ணாவுக்கு அழைப்பு. பாட்ஷா ஒரு மைல்கல். அதன் இரண்டாம் பாகம் எடுத்து அதனை கெடுக்க வேண்டாம் என்று மென்மையாக சுரேஷ் கிருஷ்ணாவிடம் கூற, ரஜினியின் பேச்சில் இருந்த நிஜத்தை புரிந்து கொண்ட அவரும் பாட்ஷா 2 கனவை மூட்டைகட்டி பரணில் போட்டுவிட்டார்.
வர்ற போகிக்கு எடுத்து எரிச்சிடுங்க பாஸ்.